சே.சிவசண்முகராஜா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சே.சிவசண்முகராஜா, சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவ அலகு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, வைகாசி 2012. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செற் பிறின்ரேர்ஸ், பலாலி வீதி). vi, 14 பக்கம், விலை: ரூபா 60.00, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-53216- 5-5. கி.பி. 12 – 15 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்துத் தமிழ் மன்னர் காலத்தில் பரராசசேகரம், செகராசசேகரம், இலங்கைச் சிங்கை மன்னன் நயனவிதி முதலான நூல்கள் தோற்றம் பெற்றன. இவை யாவும் தொகுப்பு நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றிலே கூறப்பட்டுள்ள மருந்துகளில் பல தற்போதும் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பெருவழக்காயுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நூலகத்திலுள்ள ஏட்டுச் சுவடிகளை ஆய்வுசெய்து இதுவரை அச்சில் வெளிவராத நூல்களை இனங்கண்டு அவற்றைப் பொருளுரையுடன் வெளியிடுவதுடன், ஏற்கெனவே பதிப்பிக்கப்பட்ட நூல்கள் தொடர்பாக, கிடைக்கும் ஏட்டுச் சுவடிகளுடன் ஒப்புநோக்கி தவறுகளைத் திருத்தியும் விட்டுப்போன பகுதிகள் இருப்பின் அவற்றைச் சேர்த்தும் பாடல்களுக்குப் பொருளும், தேவையான விளக்கவுரைகளும் எழுதி வெளியிடும் பணியை நூலாசிரியர் மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில் ஏட்டுச்சுவடி இலக்கம் -7 1904இல் பதிப்பிக்கப்பட்ட நயனவிதி நூல் பரராசசேகரம் சிரரோகநிதானம் (1928) ஆகியவற்றை ஒப்புநோக்கி ஆராய்ந்து ‘பரராசசேகர நயனவிதி” என்னும் இந்நூல் விளக்க உரையுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந் நூலில், கண்நோய்களின் எண்ணிக்கையும் வகையும், சிலேட்டும காசகுணம், ஒடுக்கண்ணின் குணம், மலங்குகண், இரணகாசம், முடமயிர், நீலகாசம், கட்கட்டிகாசம், படலம், செவ்வரி, அதிமாங்கிஷம், கண்சிவப்பு, புருணி, சொறிகண், இழிகண், சொருகுகண், அந்திமாலை, மாலைக்கண், விரிகண், கண்புகைச்சல், கண்பூ, கண்ணெழுச்சி, அவிகண், பில்லம், கண்கோபம், பற்பரோகம், கண்காசம், செங்கலங்கல், கண்நெரிவு, அழுகண், சீழ்க்கண், குலாவுகண், கண்படலத்துக்கு சிகிச்சை, கண் வேதனைக்கு உண்டை, கண்கோபம் மாற மருந்து, இளநீர்க் குழம்பு, கண்படவனுக்கு, பச்சை மாத்திரை, கண்படவனுக்கு உண்டை, படலக்குளிகை அல்லது தாம்பிராதிக் குளிகை, ஆணிப்பூவுக்கு, விரிவுகண்ணிற் கிருமிக்கு, இழிகண்-முடமயிர்-ஆணிப்பூவிற்கு, அமரத்துக்கு, சீதுளாய்ச்சாற்றுக் குழம்பு, காரீயக்கோல் ஆகிய 46 பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.