த.மலர்ச்செல்வன். மட்டக்களப்பு: மறுகா, உள்வீதி, ஆரையம்பதி 3, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (அக்கரைப்பற்று-01: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட்). ix, 162 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 450., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-7983-00-4. உலகளாவிய ரீதியில் இன்று பாரம்பரிய அரங்குகள் தொடர்பான ஆய்வுகள் பெரும் முக்கியத்துவம் பெற்றுவருகின்றன. ஒருகுறிப்பிட்ட பிரதேச மக்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் அவர்களின் பேறுகைகளையும் புரிந்து கொள்வதற்கு அரங்குகளின் செயல்வாதம் துணைநிற்கின்றது. இவ்வகையில் ஈழத்து நாடக வளர்ச்சியில் குறிப்பாக மட்டக்களப்பு நாடக இயங்கியலில் ஆரையம்பதியின் அரங்கு ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்கியுள்ளது. மரபுவழி நாடகச் செயற்பாட்டிலிருந்து நவீன நாடக முயற்சிகள் வரை அதன் எல்லைகள் விரிவடைந்துள்ளன. இந்தப் பின்னணியில் 19ஆம் நூற்றாண்டு தொடக்கம் 21ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் உச்சமான நாடகப் பேறுகளை வழங்கியுள்ளது. இவ்வாய்வு ஆரையம்பதிப் பிரதேச நாடக மரபுகளை ஆரையம்பதிப் பிரதேசம்-அறிமுகம், பாரம்பரிய அரங்கின் செயற்பாடும் அதன் பிரிவுகளும், தென்மோடி, வடமோடிக் கூத்துக்களும் இசை நாடகமும், ஆரையம்பதி பிரதேச நவீன நாடக முயற்சிகள், மதிப்பீடும் விமர்சனமும் ஆகிய ஐந்து இயல்களில் தன் கருத்துக்களை முன்வைக்கின்றது. ஆரையம்பதி த.மலர்ச் செல்வனால் தனது பல்கலைக்கழக முதுமாணிக் கற்கைநெறியின் தேவைக்காக இவ்வாய்வு 11 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டதாயினும், ஆய்வில் சொல்லப்பட்ட விடயங்களில் இன்றளவில் பாரிய மாற்றங்கள் எதனையும் காணமுடியவில்லை.