நித்தியானந்தன், எம்.பொன்மீரா, க.கருப்பு (தொகுப்பாசிரியர்கள்). தெகிவளை: அகவெளி வெளியீட்டகம், 22-1/3, அப்பன்சோ மாவத்தை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 164 பக்கம், விலை: ரூபா 280.00, அளவு: 21.5/14 சமீ., ISBN: 978-955-1641- 15-3. அகவிழி குழுவினர், கல்வித் திணைக்களத்தினால் இலங்கைத் தமிழ் மாணவர்களுக்காக விதித்துரைக்கப்பட்ட அனைத்துப் பாடப்பகுதிகளையும் விரிவாகக் கற்கும் செயற்பாட்டில் மாணவர்களை உள்ளீர்ப்பதற்கு இலகுவான வழியில் உப பாடநூல்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். அவ்வகையில் இது 2009 முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவான சிறுகதைகள் தொடர்பான திரட்டு நூலாகும். இதனூடாக முக்கியமான ஆறு சிறுகதைகளைப் படித்தறியவும், சிறுகதைகளின் அமைப்புகள், பண்புகள், பரிமாணம் என்பவற்றை விளங்கிக்கொள்ளவும் சிறுகதைகளை எழுதுவதற்கான வழிகாட்டுதலை பெறவும் குறிப்பிட்ட சிறுகதை ஆசிரியர்கள் பற்றிய அறிமுகக் குறிப்பை தெரிந்துகொள்ளவும் சிறுகதைகளை விமர்சனப் பார்வையோடு நோக்கும் பயிற்சியைப் பெறவும், குறிப்பிட்ட கதைகளிலிருந்து தொகுக்கப்பட்ட வினாவிடைப் பயிற்சிகளை வாசிக்கவும். பயிற்சிப் பட்டறையில் ஈடுபடவும் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது. அவ்வகையில் இந்நூல் சிறுகதை என்றால் என்ன? (ஜெயமோகன்), புதுமைப்பித்தனும் தொன்ம மரபும் (சாபவிமோசனம் கதையை முன்வைத்து), சாபவிமோசனம், வெறும் சோற்றுக்கே வந்தது, தமிழ் சிறுகதை வரலாற்றில் ஜெயகாந்தன், யுகசந்தி, தாய், ஒரு கூடைக் கொழுந்து, ஒளி ஆகிய ஒன்பது அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47405).