தமிழ் உதயா (இயற்பெயர்: பசுபதி உதயகுமாரி விவேகானந்தராஜா). தமிழ்நாடு: நன்செய் பிரசுரம், அபுபேலஸ், திருவாரூர் சாலை, திருத்துறைப் பூண்டி 614713, 1வது பதிப்பு, ஒகஸ்ட் 2017. (சென்னை 600005: சாய் தென்றல் பிரிண்டர்ஸ்). 80 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-930475- 1-4. பசுபதி உதயகுமாரி விவேகானந்தராஜா எனும் இயற்பெயர் கொண்ட தமிழ் உதயா, ஆரம்பகாலத்தில் தமிழ்ப்பிரியா, தமிழ்மதி, தமிழினி ஆகிய புனை பெயர்களிலும் தனது கவிதைகளை ஊடகங்களில் வழங்கி வந்தவர். 1996இல் ஆசிரிய சேவையில் இணைந்த இவர், வவுனியா மாவட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றிய பின்னர் புலம்பெயர்ந்து தற்போது லண்டனில் வாழ்ந்து வருகிறார். தமிழ் உதயாவின் இந்நூலிலுள்ள கவிதைகள் மிகை யதார்த்தவாதப் பண்பு (சர்ரியலிசம்) கொண்டவை என்று தனது முன்னுரையில் கூறும் அனஸ், அவரது ஆழ்மன எண்ணங்களின் வெளிப்பாடுகளாக இக்கவிதைகள் அமைவதாகக் குறிப்பிடுகின்றார். தமிழ் உதயாவின் ஒவ்வொரு கவிதையும் ஒரு சிறு கதையையே சொல்லிவிடும் என்கிறார். ரசனை நிறைந்த வாழ்வின் எல்லா உணர்வுகளையும் தமிழ் உதயாவால் சொல்ல முடிகின்றது. வாழ்வை கவிதைகளின் சொற்களால் மூடியபடி அவரது கவிதைகள் பயணிக்கின்றன.