14577 உப்புச் சாடிக்குள் உறையும் துயரக்கடல்.

தமிழ் உதயா (இயற்பெயர்: பசுபதி உதயகுமாரி விவேகானந்தராஜா). தமிழ்நாடு: நன்செய் பிரசுரம், அபுபேலஸ், திருவாரூர் சாலை, திருத்துறைப் பூண்டி 614713, 1வது பதிப்பு, ஒகஸ்ட் 2017. (சென்னை 600005: சாய் தென்றல் பிரிண்டர்ஸ்). 80 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81- 930475-2-1. “எழுத்துகள் எனக்கு வெறும் எழுதுகோலின் பிரசவம் இல்லை. எல்லா உறவுகளாலும் நிராகரிக்கப்பட்ட என் ஏக்கங்களை கூர் உடைந்த பேனாக்களால் எழுதித் தீர்க்கிறேன்” என்று சொல்லும் ஈழத்துக் கவிஞர் தமிழ் உதயாவின் ஐந்தாவது கவிதை நூல். துயர்மிகு வாழ்வின் வலிகளுக்கிடையே சுரக்கும் அன்பை மிகக் குறைந்த சொற்களால் கவிதையாக்கியுள்ளார். உடைந்துபோன உப்புச் சாடிக்குள் சொற்களாலான ஒரு துயரக் கடலை உருவாக்குகின்றார். கடலலை, சொல், துயரம் மூன்றுமே ஒன்றையொன்று அள்ளியணைத்துக்கொண்டு விஞ்சத் துடிப்பவை. கவிதை மூலமே நமக்கெல்லாம் அறிமுகமான தமிழ் உதயா ஈழத்தின் வடபுலத்தில் மல்லாவிக் கிராமத்தில் பிறந்தவர். தன் கல்வியை மல்லாவி மத்திய கல்லூரியிலும், யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும் கற்றவர். அவரது வாழ்வியற் சூழல் கிராமங்கள் ஊடாகவே நகர்ந்துள்ளன. எனினும் பலருடனும் பழகும் வாய்ப்புக்கள் அதிகம் பெறக்கூடிய ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டு பல இடங்களிலும் கற்பிக்கும் பொழுது இன்னும் வாசிக்கும் ஆற்றலை, எழுதும் பழக்கத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முடிந்ததால் பலருக்கும் தெரிந்த நல்லதொரு படைப்பாளியாய் நமக்குத் தெரிகிறார்.

ஏனைய பதிவுகள்