பிறேமா எழில். யாழ்ப்பாணம்: சாரல் வெளியீட்டகம், சித்தங்கேணி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xvi, 80 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-1245-13-9. யாழ்ப்பாண மாவட்டத்தில் சித்தங்கேணியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் பிறேமா எழில். 1995இல் இடப்பெயர்வின்போது மாங்குளத்தில் தங்கி மாங்குளம் மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் தேறியவர். “செந்தமிழ்ப் பயிற்சிப் பள்ளி” மாணவியான இவர் அங்கு பண்டிதர் பரந்தாமனிடம் செந்தமிழ் இலக்கணம் கற்றுத் தேறியவர். தனது ஆளுமையினால் தமிழகத்தில் யோகக் கலை பயின்று தாயகம் திரும்பி, அங்கு யோகப் பயிற்சி ஆசிரியராகவும், அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையுடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவள ஆற்றுகைகள் வழங்கும் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். உருக்கி வார்த்த உணர்வுகள் இவரது முதலாவது பிரசுரம். “உணர்வோடு ஒரு நிமிடம்” தொடங்கி, “உயிரில் கலந்த உறவு” ஈறாகத் தன் வாழ்வின் கனதிகளை, தான் அடைந்த வலிகளை, வெற்றிகளை, கண்ட கனவுகளை, கைவிட்டுப்போன உண்மைகளை, ஏற்றுக்கொண்ட ஏமாற்றங்களை, வாழ்வியல் அனுபவங்களை யதார்த்த வடிவில் எழுபத்தி இரண்டு கவிதைகளாக்கிப் பரிமாறியிருக்கின்றார். இந்நூல் பண்டிதர் வி.பரந்தாமனின் விரிவான அணிந்துரையுடன் கூடியது.