14599 காலநதி: கவிதைத் தொகுப்பு.

வட்டக்கச்சி வினோத். கிளிநொச்சி: தொலைநோக்கி, வட்டக்கச்சி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xiv, 66 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 18.5×12.5 சமீ.,ISBN: 978-955-43466-0-4. யாழ்ப்பாணத்தில் பிறந்து, வடபகுதியின் நீரேந்துப் பிரதேசமான இரணைமடுக்குளக் கரையில் அமைந்துள்ள வட்டக்கச்சியை வாழ்விடமாகக் கொண்டவர் வினோத். சமூகவலைத்தளங்களில் தன் கவிதைகளால் அறிமுகமானவர். இது நூலுருவில் வெளியாகிய இவரது முதலாவது கவிதைத் தொகுதி. தனக்குத் தெரிந்த தமிழில் எளிமையான வரிகளைத் தொடுத்து கவிதை படைக்கும் இவரை முகப்புத்தகமே அறிமுகப்படுத்தியது. காலநதி இவரது முதலாவது நூலாக வெளிவந்தது. போராட்டம், புனர்வாழ்வு என்று எல்லாத் தமிழ் இளைஞர்களையும் போல இக்கவிஞனையும் தொட்டுப் போன ஒன்றே. கவிதை இவரது பாடசாலை முடிவுக் காலத்தில் தொடங்கி போர்காலம், சிறைக் கூடம் என்பவற்றில் தனது அப்பியாசப் புத்தகத்தில் எழுத்துக்களாக தொடர்ந்ததாகக் குறிப்பிடுகின்றார். முகப்புத்தகம் இவருடைய பாதையில் புதிய திருப்பத்தையும் இலக்கிய வட்டத்தையும் அறிமுகம் செய்திருந்தது. இவரது முதல் பாடல் வரிகளாக குப்பிளான் கன்னிமார் அம்மன் கோயிலில் வெளியீடு செய்யப்பட்ட “கருணை அழகே கௌரியம்மா” என்னும் இறுவெட்டில் சுதர்சன் அவர்களின் இசையில் தமிழகப் பாடகி அனுராதா ஸ்ரீராம் பாடி இருந்தார். தமிழகத்தின் கந்தப்பூக்கள் யுகபாரதி அவர்கள் இவரது ஹைக்கூ கவிதைகளை சீர்மைப் படுத்தி ஹைக்கூ எழுதக் கற்றுத்தந்ததாகக் குறிப்பிடுகிறார்.

ஏனைய பதிவுகள்