14608 சியக்காய் வாசக்காரியும் சில்வண்டுக் காதலனும்.

அனாதியன் (இயற்பெயர்: மார்க் ஜனாத்தகன்). கனடா: ஐங்கரன் கதிர்காமநாதன், நிறுவுநர், படைப்பாளிகள் உலகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xvii, 80 பக்கம்,விலை: ரூபா 220.00, அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-3981- 00-5. சீயக்காய் வாசம் அதன் நுரை இன்றளவும் இக்கவிஞரால் மறக்கமுடியாத சிறுபராய நினைவுகள். மணம் எம்மைச் சூழ்கின்றபோது நாசி வழியாக அதனை நுகர முடிகின்றது. ஆனால் சீயக்காய் வாசம் நினைத்தாலே மணந்துவிடுகின்றது. அதுபோலவே காதலை நினைக்கும் போதே இதயத்தில் பேரானந்தமும் சில சமயம் பெருவலியும் ஏற்படுகின்றது. இந்த ஒற்றுமையே கவிஞர் கண்ட காதலிக்கு சீயக்காய் வாசக்காரி என்று பெயரிடுகிறார். சில்வண்டுகளின் ஓசை செவிப்பறையை ஊடறுத்துச் செல்வதையும் மறக்க முடியாதுள்ளது. சில்வண்டின் ஓசை சிலசமயம் பாடலாக இசைக்கிறது. சிலசமயம் நாராசமாக ஒலிக்கின்றது. சில்வண்டுகளைத் தேடி அலையும் போதெல்லாம் அதன் மீதான காதலையும் கவிஞர் உணர்ந்துகொள்கிறார். ஒரு காதலில் எத்தனை பெரிய துரோகங்கள், ஏமாற்றங்கள், முரண்பாடுகள் இருப்பினும் அந்தக் காதலை களற்றி எறிய முடியாதளவு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளால் யாரோ ஒரு கவிஞர் எப்போதும் நிலைநிறுத்தி வருகிறார். காதல் ஒரு புகைவண்டி போல நகர்ந்துகொண்டே உள்ளது. அதில் பயணிக்கும் காதலர்கள் துரோகம் இழைத்துக்கொண்டாலும் காதல் வண்டியின் பயணங்கள் என்னவோ இன்றுவரை தொடர்கின்றன. இந்நூலில் அனாதியன் காதலை அழகாகப் படம்பிடித்திருக்கிறார். இவரது இரண்டாவது கவிதைத் தொகுதி இது.

ஏனைய பதிவுகள்