லயனல் திலகநாயகம் போல். ஆனைக்கோட்டை: திருமதி பத்தினியம்மா திலகநாயகம், மெதடிஸ் மிசன் பாடசாலை வீதி, வண். வடமேற்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி). xxiv, 81 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300.00, அளவு: 21×14 சமீ. முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர், கலாபூஷணம், சங்கீதபூஷணம், லயனல் திலகநாயகம் போல் அவர்களின் இசைத்துறைப் பங்களிப்பு போற்றுதற்குரியது. தனது செவ்விசைக் குரலினால் மக்களைக் கட்டிப் போட்டவர். ரூபவாஹினியிலும், இலங்கை வானொலியிலும் அவரது இசைக்கு மயங்கியோர் ஏராளம். அவரது சங்கீதக் கச்சேரிக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தனர். அவரது துணைவியார் சிதம்பரபத்தினி (பத்தினியம்மா) யாத்த பாடல்களை சுர தாளக் குறிப்புடன் முன்னர் “புதிய நோக்கில் செந்தமிழ் செவ்விசைப் பாக்கள்” என்ற நூலாக வெளியிட்டிருந்தார். “தமிழோடு இசை பாடல்” நூலும் அமரர் திலகநாயகம் போல் அவர்களது பாடல்களின் தொகுப்பாகவே வெளிவந்துள்ளது. தமிழ்த்தாய் வணக்கம், யேசுநாதரின் தோத்திரங்கள், யேசு கிறிஸ்து சரிதம் (பஜனை வடிவில்), கத்தோலிக்க தேவாலயங்கள் மேற் பாடிய பாடல்கள், சைவத் திருத்தலங்கள்மீது பாடப்பட்ட கீர்த்தனைகள், சமுதாய நலன் நோக்கிய சிறுவர்களுக்கான கவிதைகள், செந்தமிழும் சான்றோரும் பற்றிப் புகழ்பாடும் பாடல்கள், புதிய நோக்கில் செந்தமிழ் செவ்விசைப் பாக்கள் ஆகிய எட்டு பிரிவுகளின்கீழ் இவை வகுத்துத் தரப்பட்டுள்ளன.