காங்கேயன் (இயற்பெயர்: வி.சு.விஜயலாதன்). யாழ்ப்பாணம்: வி.சு.விஜயலாதன், சிறப்புக் கலை மாணவன், சமூகவியல்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: Focus Printers). xiv, 78 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×11.5 சமீ. இறுதிப் போர்க்காலத்தில் மிகக் கடுமையாக காயமடைந்து கண்பார்வையை முற்றாக இழந்தவர் விஜயகுமார் விஜயலாதன். முடங்கிக் கிடக்காமல் முயற்சியினால் இன்று பல்கலைக்கழக மாணவராக, விளையாட்டு வீரராக, பல்துறைக் கலைஞராக பரிணமித்து நிற்கிறார். மீண்டும் பெறமுடியாத விழிப்புலனை எமக்காக இழந்த இந்த இளைஞன், தனது கண்களால் அன்று பதிவுசெய்த காட்சிகளை, தமிழினம் சுமந்த பெரும் துயரங்களை, ஈழத் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, வரலாற்றின் நேரடிச் சாட்சியாக இருந்து இன்று எழுத்தில் வடித்திருக்கிறார். இக்கவிதை நூலை விழிப்புல வலுவிழந்த மாற்றுத்திறனாளிகளும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் கவிஞரால் ஒலி வடிவில் இறுவட்டு ஒன்றும் வெளியிடப்பட்டது. வரலாற்றை முதற்தர பட்டறிவோடு பதிவுசெய்யும் இந்த இளம் படைப்பாளியின் முயற்சிக்கு யாழ் பல்கலைக்க சமூகம் உறுதுணையாய் இருந்தமை வரவேற்கத் தக்கதொரு முன்மாதிரியாகும். 2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் 18ஆம் திகதி இலங்கைப் படையினரால் முள்ளிவாய்க்கால் மண்ணிலே கொல்லப்பட்ட தமிழ் மக்களின் வலிகளையும் வடுக்களையும் கண்டு அனுபவித்த இவ்விளைஞன், பத்து ஆண்டுகளாகியும் அதனை மறவாது உள்ளத்தில் தேக்கி வைத்து கவிதையாக்கியிருக்கிறார். இறுதி யுத்த காலப்பகுதியில் தமிழீழ இலட்சியப் பாதையில் பயணித்து தன் விழிப்புலன்களையும் இழந்து யுத்தத்தின் வடுக்களோடு வாழ்ந்துகொண்டிருக்கும் இளைஞன் இவர். முள்ளிவாய்க்கால் புத்தாண்டு நிறைவு நினைவோடு இக்கவிதைத் தொகுதியைப் படைத்திருக்கிறார். ஜெர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரதும், லண்டன் புதிய வாழ்வு நிறுவனத்தினரதும் நிதி உதவியுடன் இந்நூல் வெளிவந்துள்ளது. காங்கேசன்துறையைச் சேர்ந்த விஜயகுமார்- சுமதி தேவி தம்பதியரின் மகனான விஜயலாதன், இளமைக்காலக் கல்வியை மானிப்பாய் சென்ட் ஆன்ஸ் பாடசாலையிலும், கிளிநொச்சி மகாவித்தியாலயத்திலும், இறுதி யுத்தத்தில் பார்வை இழந்த பின்னர் கைதடி நபில்ட் பாடசாலையிலும், பயின்று தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் சிறப்புக் கலையில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.