14657 விசித்திரங்களால் நிறமூட்டப்பட்ட உலகு.

ஏ.எம்.குர்ஷித். மருதமுனை-04: புதுப்புனைவு இலக்கிய வட்டம், 23B, மசூர் மௌலானா வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (அக்கரைப்பற்று-01: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட்). xvi, 80 பக்கம், விலை: ரூபா 290.00, அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955- 54129-0-2. அப்துல் மஜீத் குர்ஷித் மருதமுனையைச் சேர்ந்த கவிஞர். இவரது “விசித்திரங்களால் நிறமூட்டப்பட்ட உலகு”, யாருடைய ஒப்பனையும் பாவனையுமில்லாத தனக்கேயுரிய தனி மொழியொன்றுடன் வலம்வருகிறது. இவரது கவிதைகள் பாவ ஒப்புக்கோடலாய் பெண்ணுணர்வுகளை உள்வாங்கி வலிகளாய் வெளிப்படுகின்றன. குரல்வளை நெரிபட்டுக்கொண்டிருப்பவர்களின் குரல்களாயும் அவை கேட்கின்றன. எதிரே நடப்பவற்றுக்கு ஏதும் செய்யவொண்ணா பெருமூச்சுகளாயும் அவை வெளிவருகின்றன. பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையை எதிர்க்கும்ஃ கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் கோர்வைகளைக் கொண்ட பெண்நிலைச் சிந்தனைகளை குர்சித் உள்வாங்கி வெளிப்படுத்துகிறார். ஆண்கள் செய்த பாவங்களுக்காய் பெண்ணாக மாறி பாவ ஒப்புக்கோடலாய் மாறிய ஒத்துணர்வுக் கவிதைகளுக்கும் அவரின் படைப்பின் உளவியலுக்கும் இடையே சிறிய கடக்கக்கூடிய இடைவெளிதான் காணப்படுகின்றது.

ஏனைய பதிவுகள்