எஸ்.கருணானந்தராஜா. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 94: ஆதிலட்சுமி பிரிண்டேர்ஸ்). xxii, 202 பக்கம், விலை: இந்திய ரூபா 140.00, அளவு: 21×14 சமீ., ISBN: 978-93- 86031-80-8. கவிஞர் யுகசாரதியின் தேர்ந்த 100 கவிதைகளின் தொகுப்பு இது. பாரதியின் தீவிர பக்தனான கவிஞர் எஸ்.கருணானந்தராஜாவின் கவிதைகளிலும் அவ்வப்போது பாரதியின் கவிதைகளின் தாக்கங்கள் புலப்படுகின்றன. “தனிமையோடு பேசுங்கள்” என்ற கவிதையில் “தனிமை கண்டதுண்டு-அதிலே சாரமிருக்குதம்மா” என்ற பாரதியின் வரியை நினைவூட்டுகின்றார். கவிதைத் தொகுதிகளில் பொதுவாகக் கவிதைகளுக்குப் பொருத்தமாகப் படம் வரைந்திருப்பார்கள். ஆனால் இவரோ படங்களுக்குப் பொருத்தமாக, அபார கற்பனை வளத்துடன் கவிதைகளைத் தருகின்றார். ஒரு சிறு பெண்குழந்தை இடுப்பில் குடமெடுத்து வெற்றுக் கால்களோடு வெயிலில் நடக்கிறாள். குழந்தையின் கால்கள் சுடுமே என்று கவலைப்படுகிறார் கவிஞர். சிந்தனைக்குரிய தத்துவங்கள் அவரது கவிதைகளில் இழையோடுகின்றன. குழப்பத்திலிருந்து உலகம் தோன்றியது என்ற பொதுவாகக் கூறுவர். இவரோ அன்பிலிருந்துதான் எல்லாமும் தோன்றின என்கிறார். அழியா இருப்பு என்னும் கவிதை ஆன்மாவின் நிலைத்த தன்மையை வெளிப்படுத்துகின்றது. நாம் இந்த உலகில் ஒரு புள்ளி அளவுகூட இல்லை. ஆனால் நம்மை பெரிய புள்ளிகளாகக் கருதி ஆர்ப்பாட்டம் பண்ணுகிறோம் என்கிறார். பக்தியில்லா வெற்றுச் சடங்குகளால் இறைவனைத் தேடுவதில் பயனில்லை என்று இத்தொகுதிக் கவிதைகளில் பல இடங்களில் கூறிப் பதிய வைக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64852).