சமரபாகு சீனா உதயகுமார். வல்வெட்டித்துறை: குபேந்திரா பதிப்பகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரின்டர்ஸ், 555 நாவலர் வீதி). vi, 155 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 19.5×14.5 சமீ., ISBN: 978-955-7363- 02-8. பதினொரு சிறுகதைகளைக் கொண்டதாக தமிழினி என்ற இந்தத் தொகுப்பு வெளிவந்துள்ளது. வீரகேசரி, தினக்குரல் ஆகிய தேசியப் பத்திரிகைகளிலும், ஞானம், ஜீவநதி, ஒளி அரசி, ஆகிய சஞ்சிகைகளிலும் 2014 முதல் 2017 வரையான காலப்பகுதியில் வெளிவந்த சிறுகதைகளையே சமரபாகு சீனா உதயகுமார் தொகுத்து நூலாக்கியுள்ளார். தமிழினி என்பது இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒரு சிறுகதையின் பெயர். அதுவே நூலின் பெயராகவும் ஆகியிருக்கிறது. சிறுவர்களையும் இளைஞர்களையும் இலக்கு வைத்தே இந்தக் கதைகளைப் படைத்திருக்கிறார். சொல்லப் போனால் இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஒரு “இளைஞர் சீர்திருத்த சிறுகதைத் தொகுப்பு” என்றே சொல்லலாம். தமிழினி, காசிருந்தால் வாங்கலாம், சுயம் உரிப்பு, அம்மா, மகேஸ்வரன் சேர், முதுசொம், கிறுக்கல் சித்திரங்கள், மழைக்குமிழ் கர்வம், அவளும் ஒரு பெண், புலமைப் பரிசில், மைதிலி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பதினொரு சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் வடமராட்சியின் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட சமரபாகு சீனா உதயகுமார், உயிரோட்டமான எழுத்துகளால் இயல்பான மொழிநடையில் எல்லோரையும் கவரும் விதமான சொல்லாடல்கள் இவருடையவை. இவரது பதின்நான்காவது நூல் இதுவாகும்.