வாகரைவாணன். மட்டக்களப்பு: ஆரணியகம், 479/5, புதிய கல்முனை வீதி, நாவற்குடா, 1வது பதிப்பு, ஜுன் 2007. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). vii, 70 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 21×14.5 சமீ. தமிழ் அரசர்களின் வியக்கத்தக்க ஆட்சிமுறைமையையும் அவர்கள் மக்கள் மேம்பாட்டிற்காகவும், சமய வளர்ச்சிக்காகவும், ஆற்றிய அளப்பரிய பங்கினையும் கற்பனையுடன் கலந்து இதிலுள்ள கதைகளின் வாயிலாகத் தரிசிக்க முடிகின்றது. எகிப்தில் இருந்து விரட்டப்பட்ட மக்கள் கூட்டமொன்று காயல்பட்டணம், கள்ளிக்கோட்டை, மதுரை போன்ற இடங்களிலும் குடியேறி பின்னர் காயல் பட்டணத்திலிருந்தவர்களில் சிலர் இலங்கையின் பேருவளைப் பகுதியில் வந்து குடியேறியதாக இந்நூல் குறிப்பிடுகின்றது. பனிச்சங்கேணி அரசி, பண்டார வன்னியன், ஒரு மகாகவியின் சாயங்காலம், மகா பராக்கிரமபாகு, ஒரு கிராமத்தின் கதை, நந்திக்கொடி, காயல், முப்பது வெள்ளிக்காசுகள், கோகர்ணம், கி.பி. எட்டாம் நூற்றாண்டிலே, நாகதேசம், யாழ்ப்பாண மன்னன் சங்கிலியன், கந்தளாய்- அது ஒரு காலம், முத்துக்கல், நடுகல், அரசி உலக நாச்சியார் ஆகிய பதினாறு தலைப்புகளில் வரலாற்றுக் காட்சிகள் சுவையான சிறுகதைகளாக நகர்த்திச் செல்லப்படுகின்றன. தமிழகத்தின் இனக் குழுமமான வன்னியருக்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலான தொடர்புநிலை சம்பந்தமான விரிவான பார்வையையும் இந்நூல் வழங்குகின்றது. வன்னியர் என்ற தமிழ்ச் சமூகத்தின் பழமை, போர்க்கலையில் அவர்களின் வல்லமை, மட்டக்களப்பில் வாழ்ந்திருந்தமைக்கான ஆய்வுச் சான்றுகள் என்பன இந்நூலில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 43181).