தெல்லிப்பழையூர் சிதம்பரபாரதி (இயற்பெயர்: சிதம்பரபாரதி திருச்செந்திநாதன்). யாழ்ப்பாணம்: எழு வெளியீட்டகம், எழு கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (யாழ்ப்பாணம்: புதிய எவகிரீன் அச்சகம்). x, 46 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. எம்மத்தியில் வாழ்ந்து மறைந்த மூத்த எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்களின் ஓராண்டு நினைவுகளுக்காக 15.10.2019இல் அவரது புதல்வி தெல்லியூர் சிதம்பரபாரதியினது உணர்வுகளின் தொகுதியான விடைபெறல் வெளியிடப்பட்டுள்ளது. தந்தையாரின் நூல் தோட்டத்துள் உலவியும் இலக்கிய உரையாடல்களை செவிமடுத்தும் பெற்ற அறிதலோடும் தனக்கான சமூக, குடும்ப உறவுநிலையோடும் தன்னைப் பாதித்த அல்லது அருட்டிய உணர்வுகளைத் தொகுத்துள்ளார். இது அவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு. மீண்டெழுவேன் எனும் அசையாத நம்பிக்கையில் தனது மருத்துவமனை வாழ்வைப் பதிவுசெய்யும் அவாவுடன் இருந்து மறைந்த தந்தை கூற நினைத்த கதை: அது அவரது இவ்வுலக வாழ்வின் விடைபெறுதலாகிப் போன நிலையில் அவரது வழியில் மகள் பேனா எடுத்து முதலடி வைத்துள்ளார்.