14735 அலுவாக்கரை (நாவல்).

எஸ்.ஏ.உதயன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (15), 16-216 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-30- 9626-5. தெம்மாடுகள், சொடுதா, வாசாப்பு, லேமியா- ஆகிய நாவல்கள் மூலம் அறிமுகமாகிய மன்னார் பிரதேசத்தின் எழுத்தாளர் எஸ்.ஏ.உதயனின் மற்றுமொரு பேசாலை மண்மணம் கமழும் நாவல் இது. கூர்மையான சமூகப் பார்வையும், பிசிறற்ற மொழிவாண்மையும், பாத்திரங்களை உயிர்த்துடிப்புடன் யதார்த்தம் குன்றாமல் உலவவிடும் திறன் மிக்கவர் உதயன். கடல்நீர் தரையைத் தொடும் நிலப்பகுதியை “அலைவாய்க் கரை” என்று அறிகிறோம். கடற்கரைக் கிராம மக்களின் பேச்சாடலில் அது “அலுவாக்கரை” என்றாகி நாவலின் தலைப்புமாகியது. இன்று நாட்டின் “சமுத்திரத்தின் மழைக்காடுகள்”என்று கடற்சூழலியலாளர்களால் வர்ணிக்கப்படும் கடலடிப் பவளப்பாறைகளும் பிளாந்தங்களும் மீன் பிடியாளர்களால் அழித்தொழிக்கப்படுகின்றன. இந்தியாவில் இருந்து நமது கடல் எல்லைக்குள் இறால் பிடிக்கவென வரும் ஏராளமான இழுவைப் படகுகள் நமது கடற் பிராந்தியங்களின் கடலடி உயிர்களின் உற்பத்தி மையங்களின் முதுகில் தினமும் ஏற்படுத்தும் கீறல்களும், காயங்களும் அழிவுகளும் சாதாரணமானவையல்ல. அவை எமது அடுத்த தலைமுறைகளின் பொருண்மியத்தை இல்லாதாக்கிவிடுகின்ற அபாய சமிக்ஞைகள் என்பதைச் சொல்லும் விதமாக இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்