வெலிவிட ஏ.சீ.ஜரீனா முஸ்தபா. மாவனல்ல: எக்மி பதிப்பகம், 19, கமந்தெனிய வீதி, கிரிங்கதெனிய, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (கொழும்பு 14: ஐ.பீ.சீ.அச்சகம், 24, டி வாஸ் ஒழுங்கை). xvii, 218 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-1825-13-3. 2009/2010 காலகட்டத்தில் மித்திரன் வார மலரில் 59 அத்தியாயங்களில் பிரசுரிக்கப்பட்ட தொடர்கதை. நூலுருவில் 49 அத்தியாயங்களாகச் சுருக்கப்பெற்று வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு மூன்று குடும்பங்கள், ஏழெட்டுப் பாத்திரங்கள், ஆகியவையே இந்நாவலை நகர்த்திச் செல்கின்றன. சிறுநீரக நோயாளியானநித்தமும் படுக்கையில் கிடக்கும் தாய் சுலைதா, அவளது மகன் டாக்டர் அஸார், மற்றொரு மகனான கர்வம் மிகக்கொண்ட அரூஸ், அரூசின் மனைவி நிஷாபா, வளர்ப்பு மகள் ரிலாயா ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குடும்பம். லாஹிர் ஹாஜியார், ஹாஜியாரின் மனைவி ரலியா உம்மா, மகன் அர்ஷாத், ஆமினாவின் தம்பி ஆதில் ஆகியோரை உள்ளடக்கிய மற்றும் ஒரு குடும்பம். இந்த இரண்டு குடும்பங்களே இந்நாவலின் பிரதான பாத்திரங்கள். அலீமாவும் ரஷீதும் தம்பதிகள். வெளிநாட்டில் வாழ்ந்து வரும் ரஷீத், மனைவி அலீமா மீது சநதேகம் கொள்கிறான். ஓர் ஆணின் உண்மையான காதல் உணர்வு அஸார்தீன் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. இந்நாவலைப் பொறுத்தவரை, சமூகத்தில் சாதாரணமாக, ஆனால் அதிகளவில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாகவே கருதமுடிகின்றது. கதைக்கரு சாதாரணமாக இருப்பினும் ஒரு மர்மம் அல்லது புதிர் நாவலின் போக்கில் மெல்லிதாக இழையோடிச் செல்கின்றது.