தினேஷ் ஏகாம்பரம். சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). x, 242 பக்கம், விலை: ரூபா 500.00, அளவு: 18×12 சமீ. குறும்பட இயக்குநராகவும் எழுத்துத்துறைக் கவிஞனாகவும் தன்னைப் பிரகடனப்படுத்தும் தினேஷ், யாழ்ப்பாணம், சுதுமலையைப் பிறப்பிமாகக் கொண்டவர். குண்டுவீச்சுக்கும் கொள்கைப் பேச்சுக்கும் இடையே ஓரினம் தன் அடையாளத்தை ஆவணப்படுத்தும் முயற்சியாகவே இந்நாவல் உருவாக்கப் பட்டுள்ளது. கதை சொல்லும் உத்தி சிறப்பானது. கதை முடிவதற்கு முன்னர் இடம்பெற்ற ஒரு பரபரப்பான நிகழ்வே நாவலின் முதல் அத்தியாயமாகிறது. அடுத்து என்னவோ என்ற எதிர்பார்ப்பினை வாசகர் மனதில் ஏற்றிவிடுகிறார். நட்பு என்று வந்துவிட்டால் அதனை எப்படியாவது சிறப்புறப் பேண வேண்டும் என்பதை நாவல் வலியுறுத்துகின்றது. கோபியுடன் கொண்ட நட்பினை சர்மிலனும் சத்தியகுமாரும் நன்கு பேணுவதை நாவல் நமக்கு அதன் போக்கில் உணர்த்திச் செல்கின்றது. சர்மிலன், மலேசிய பொலிஸ் அதிகாரி சத்தியகுமார், கோபி, காயத்திரி, சண்முகவேலு ஆகிய கதாபாத்திரங்கள் முக்கியமானவர்கள். கோபிகாயத்திரி காதல் கதையின் கருவாகின்றது. கனவுலகில் வாழ்ந்த போதிலும் தனது நண்பர்களுடன் நிதானமாகப் பழகுபவன் சர்மிலன். இலங்கையிலிருந்து மலேசியாவுக்குச் சென்று தங்கும் சிலருடன் அவன் வாழ்வதாக கதை புலப்படுத்துகின்றது. கோபியின் மலேசிய வருகை அவர்களுடனான தொடர்பினை வலுப்படுத்துகின்றது. கோபியின் பார்வையில் இலங்கையின் இனப்பிரச்சினை இந்நாவலில் அவதானத்துடன் விளக்கப்படுகின்றது.