ஷோபாசக்தி. சென்னை 600005: கருப்புப் பிரதிகள், பி-55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 2வது பதிப்பு, ஜனவரி 2020, 1வது பதிப்பு, நவம்பர் 2019. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 304 பக்கம், விலை: இந்திய ரூபா 290., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81- 943310-0-1. இலங்கையில் இரண்டாயிரத்துக்குப் பிறகு புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலிருந்த போர்நிறுத்த காலகட்டம் முடிந்து இறுதிப் போர் தொடங்கும் காலகட்டத்தில் மையம் கொள்கிறது. 1989-ல் ஒரு அடைமழைக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இலுப்பங்கேணியில் பிறந்த வெள்ளிப்பாவை என்ற கிராமப்புறச் சிறுமியான ஆலா, பாலினரீதியாகவும், சாதியம், இனவாதம், அரசு பயங்கரவாதம் என அனைத்துவகையிலும் சிறுவயதிலிருந்து சந்தித்த துயரங்களையும் அதிலிருந்து தப்புவதற்குச் செய்த முயற்சிகளையும் “இச்சா” அதிநுட்பத்துடன் சொல்கிறது. ஆலா பின்னர் தற்கொலைப் போராளியாக மாறுகிறாள். பின் சிறைசெல்ல நேர்கிறது. அவள் அனுபவிக்கிற அந்த நரக வாழ்க்கையை அவள் சிறைக் குறிப்புகளாக ஒவ்வொரு நாளும் சங்கேத மொழியில் எழுதிவருகிறாள். 2019ஆம்ஆண்டு இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய ஏப்ரல் ஈஸ்ரர் குண்டுவெடிப்பில் ஒரு முன்னாள் சிறை பொறுப்பதிகாரி இறந்துபோகிறாள். இதற்கு முதல் அவள் பாரிஸ் வந்தபோது “இச்சா” எழுத்தாளரைச் சந்தித்து அந்த குறிப்புகளை ஒப்படைத்திருந்தார். அதன் சங்கேத சொற்களை உடைத்து அதை தொகுப்பாக்கி இந்த நாவலை உருவாக்குகிறார். இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த ஈஸ்டர் ஞாயிறில் நின்று தன் இலக்கை நோக்கி நாவல் நிலைகொள்கிறது. இலங்கையில் தாயை விட்டுவந்திருக்கும் கதைசொல்லி, அம்மாவையோ உறவினர்களையோ தொடர்புகொள்ள இயலாமல் அலைக்கழிந்து கொண்டிருக்கும் போது, குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் புகைப்படத்தில் மர்லின் டேமி என்ற வெள்ளைப் பெண்ணின் புகைப்படத்தைப் பார்க்கிறான். கதைசொல்லிக்கு அறிமுகமான அந்த “ஆலா” சிறையிலிருந்து கற்பனை மொழியான ‘உரோவன்” மொழியில் எழுதிய குறிப்புகளைக் கொடுத்தவள் இவளே. நாவலின் வடிவமும் சோபாசக்தியின் எழுத்தாளுமையும் இந்த நூலில் இன்னொரு பரிணாமத்துக்கு மாறியிருக்கிறது. சோகத்தை அதன் ஆன்மாவுக்குள் ஊடுருவி பேசும் மொழி பல இடங்களில் திரும்பத் திரும்ப வாசித்து பரவசமடைய வைக்கிறது. புராணிகக் கதைகளும் கதாபாத்திரங்களும் தலையிட்டுக் கொண்டேயிருக்கும் நாட்டார்புலப் பின்னணி கொண்ட இந்நாவலில் யுத்தம், வன்முறை, காமம் சார்ந்த பொன் மொழிகள் நூறையாவது பொறுக்கியெடுத்துவிட முடியும். நவீன தமிழ் இலக்கியத்தில், அவலத்தின் அத்தனை லட்சணங்களையும் கொண்டு யுத்தச் சுவையைத் தனது தனித்தன்மையான அழகியலாக ஆக்கியவர் ஷோபாசக்தி. யுத்தம் என்ற பெரிய பாம்பின் வாயாகத் திகழும் காமம், அதன் வாலான மரணத்தைக் கவ்வ முயன்று கொண்டேயிருக்கும் படைப்புதான் “இச்சா”. கிறிஸ்துவின் கடைசி இரவில் தொடங்கும் கதை, உலகெங்கும் நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களில் மையம்கொண்டு, உலகம் முழுக்க அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட மக்கள் அனைவரும் வாதைப்பட்ட இயேசுவாக மாறும் சித்திரம் ஒன்றை ஆசிரியர் இங்கு வரைகிறார்.