கெக்கிராவ ஸஹானா. கெக்கிறாவ: கெக்கிராவ ஸஹானா, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2009. (கல்ஹின்ன: விங்ஸ் கிராப்பிக்ஸ் லிமிட்டெட்). 94 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-51679-0-1. இந்நூலில் ஒருகூடும் இரு முட்டைகளும் என்ற குறுநாவலும், 1990களில் மல்லிகை இதழ்களில் வெளியான புருஷோத்தமன், உண்மைக் காதல் என்பது, உள்ளும் புறமும் பேய்கள், பெண் என்றால், அகதிகள் ஆகிய ஐந்து சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன. சிறுகதைகள் பெரும்பாலும் பெண்-பெண்மை, மென்மை, தாய்மை, அவளது மனோவியல்புகள் அவளது உடம்பு ஆகியவை ஒரு சந்தர்ப்பத்தில் அவளுக்கே எதிரியாகி விடுகின்றமையை எடுத்துக்காட்டுகின்றன. ஒரு கூடும் இரு முட்டைகளும் என்ற குறுநாவலில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தம்மளவில் சுயாதீனமானவர்கள் என்பதை ஆசிரியர் வலியுறுத்துகின்றார். பெற்றோரின் குணாதிசயங்கள் அனைத்தும் பிள்ளைகளுக்கு சமமாக வாய்ப்பதில்லை என்பதும், ஓரு பிள்ளையிடம் காணப்படும் நல்லியல்பு மற்றொரு சகோதரத்திடம் காணப்படுவதில்லை என்பதும் எமது சமூகத்தினரால் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு தவறான உயர்வு தாழ்வுச் சிக்கல்களை ஏற்படுத்துவதை ஆசிரியர் அறவே வெறுப்பதை இந்நாவலின் வாயிலாகச் சொல்லியிருக்கிறார். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளின் இரு வேறுபட்ட உணர்வுகளுக்கு சமவளவில் முக்கியத்துவம் கொடுக்கவும், மனிதனின் போலி வேஷத்திலும் முகமூடியிலும் மயங்காது, அவனது உண்மைக் குணத்தை கண்டறிய முயலும் வண்ணம் அறிவுறுத்துகின்றார். இந்நாவல் புளியங்குளம் கிராமத்தின் வாழ்வியல் பண்புகளின் பின்னணியில் வளர்க்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54193).