மலரன்னை (இயற்பெயர்: திருமதி அற்புதராணி காசிலிங்கம்). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, நவம்பர் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 130 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-4676-88-6. மலரன்னை எழுதிய உயிர்த்துளி, காகிதப்படகு, காலத்திரை ஆகிய மூன்று குறுநாவல்களின் தொகுப்பு இது. ஒரு குடும்பப் பெண் இந்தச் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ குழந்தைப்பேறு எவ்வளவு முக்கியமானதொன்று என்பதை “உயிர்துளி” வலியுறுத்துகின்றது. கணவனது துணையில்லாமல் வாழும் ஒரு பெண், கையில் குழந்தையுடன் இச்சமூகத்தில் தனியொருத்தியாக நின்று எத்தகைய இன்னல்களை அனுபவிக்கவேண்டியுள்ளது என்பதை “காகிதப்படகு” விபரிக்கிறது. ஒரு குடும்பத்தில் மனைவியின் முக்கியத்துவத்தையும் இறப்பினால் அவளைப் பிரியும்போது குடும்பத்தினரிடையே ஏற்படும் உளத்தாக்கத்தையும், உயிருடன் இருக்கும் மகளைப் பிரிந்து வாழும்போது ஏக்கத்தினால் மனம் சோர்ந்து வாடும் ஒரு தந்தையின் உணர்வுகளை “காலத்திரை” பிரதிபலிக்கின்றது. ஜீவநதி வெளியீட்டகத்தின் 114ஆவது பிரசுரமாக இக்குறுநாவல் தொகுதி வெளிவந்துள்ளது.