14777 நித்தியாவின் அர்த்தமுள்ள மௌனம்.

மாலினி வசந்த். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2013. (சென்னை 4: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). iv, 160 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 55.00, அளவு: 18×12 சமீ. வாழ்வில் நாம் எல்லோரும் கடந்து வந்த உன்னதமான தருணங்கள் அவை. ஒரு மனோவையோ, ஒரு குணசீலனையோ, கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் சந்தித்திருக்கிறோம். நித்யாவின் உணர்வுகளாக ஒரு நாளாவது வாழ்ந்திருக்கிறோம் எல்லை மீறிய கற்பனையோ, ஏற்றுக்கொள்ள முடியாத தத்துவங்களோ இல்லாமல் ஒரு தெளிவான நீரோடையாக நாவல் இயல்பாக பயணிக்கின்றது. களத்தில் கருக்கொண்டாலும், புகலிடத்துச் சங்கதிகளோடு கதை விரிகிறது. பொதுவாக ஒரு முக்கோணக் காதல் கதை.போர்க்காலச் சூழலில் சிக்கி சின்னா பின்னமாகச் சிதைந்து போயிருக்கும் ஈழத்தமிழர்களின் சின்னப் புத்திகளையும், அதன் சில்லறைத் தனங்களையும் மிகவும் அழகாகவும், நாகரிகமாகவும் நயத்தோடும் செதுக்கிக் காட்டுகின்றார். வாழ்வியலின் சிக்கலான தத்துவங்களில் தன்னை மாட்டிக்கொள்ளாமல் மிகவும் நுட்பமாகத் தள்ளி நின்று கதையை நடத்திச் செல்லும் பாங்கு வியக்க வைக்கின்றது. காதலிப்பதும், காதலியைத் தவிக்க வைப்பதும், தள்ளி வைப்பதுவும், தமிழ்ச் சமூகத்தில் ஒன்றும் புதுமையானது அல்ல. நண்பனுக்குத் துரோகம் செய்வதும், நண்பனின் காதலியைத் தான் தட்டிகொள்வதும், மணம் முடிப்பதுவும், உலகில் நடக்காதவைகள் அல்ல. காதலி கனவு காண்பதுவும், கனவுலகில் காதலனோடு கூடிவாழ்வதுவும், நிஜமான உணர்வுகள் தான். இருப்பினும் இவற்றை மறைமுகமாக எடுத்துச் சொல்ல மாலினி கையாளும் யுத்தி முறைகள் வாசகரைக் கவரக்கூடும்.

ஏனைய பதிவுகள்