இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Vetlandsveien 117, 0686 Oslo, 1வது பதிப்பு மார்ச் 2020. (மின்நூல் வடிவமைப்பு lulu.com சுய வெளியீடு உதவி). 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-0-244- 27386-6. இந்நூலில் மதுவின் இரகசியம், எதிரிகள், சதை உண்ணும்.. ஆகிய மூன்று குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. தியாகலிங்கம் இலங்கையின் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1967 ஆம் ஆண்டில் வேலுப்பிள்ளை இரத்தினம், இரத்தினம் பரமேஸ்வரி ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை காரைநகர் யாஃயாழ்ற்றன் கல்லூரியின் கனிஷ்ட பிரிவிலும், தொடர்ந்து சாதாரண தரத்தை யாஃயாழ்ற்றன் கல்லூரியிலும், உயர்தரத்தை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் பயின்றவர். 1984 ஆம் ஆண்டில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து, தமிழரின் கனவான தனி நாட்டிற்காகப் போராடப் புறப்பட்டுச் சென்றவர். தமிழகத்தில் அதற்கான இராணுவப் பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டதோடு, சென்னையில் அரசியல் பயின்று, அதைத் தோழர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். பின்பு முகாம் ஒன்றிற்குப் பொறுப்பாளராகவும் பணி புரிந்துள்ளார். அங்கு இருக்கும் போதே முகாமில் வெளியிடப்பட்ட கையெழுத்துப் பிரதிகளிலும், தமிழீழ மாணவர் பேரவையால் வெளியிடப்பட்ட சஞ்சிகையிலும் இவரது படைப்புகள் வெளிவந்தன. கடைசியாகத் திருவாரூரில் நடைபெற்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மாநாட்டில் பங்குபற்றி, அதில் கிடைத்த ஞானத்தின் முடிவில் அந்த இயக்கத்தைத் துறந்து, தனது வழியில் புறப்பட்ட இவர் சென்னையில் ஏற்பட்ட தொந்தரவால் அங்கிருந்து புலம்பெயர்ந்து நோர்வேக்கு வந்து அங்கு வாழ்ந்துவருகின்றார்.