கலையார்வன் (இயற்பெயர்: குருசுமுத்து இராயப்பு). யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், 28 மார்ட்டின் வீதி, 1வது பதிப்பு, ஐப்பசி; 2013. (பண்டத்தரிப்பு: ஜே.எஸ்.பிரிண்டர்ஸ்). xii, 144 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0197-03-3. கலையார்வனின் 16ஆவது நூலும் இரண்டாவது நாவலும் இதுவாகும். முன்னர் இவரது உப்புக்காற்று என்ற நாவல் மீனவரின் வாழ்வியலைச் சித்திரித்து 2012இல் வெளிவந்திருந்தது. வேப்பமரம், யாழ்ப்பாணத்து மண்ணின் போர்க்காலத்து வாழ்வியலை சித்திரிக்கும் கதை. கனகம்-சின்னையா தம்பதியரின் இரண்டாவது மகளான சந்திராவின் குடும்பத்தை மையமாகக் கொண்டு பின்னப்பட்ட கதை. வீட்டுவாசலில் அன்னை பேணிவளர்த்த வேப்பமரத்தை சந்திரா, தாயின் மறைவின்பின் தன் அன்னையாகவே கருதிப் பராமரிக்கிறாள். சந்திராவின் மூத்த மகன் பிரியந்தன் போராளிகளால் பிடித்துச் செல்லப்படுகின்றான். அவனை மீட்பதற்காக சந்திரா-ஆனந்தன் தம்பதியனரின் போராட்டம் நாவலில் சொல்லப்படுகின்றது. மகனை போராளிகளிடமிருந்து வெற்றிகரமாக மீட்ட போதிலும் அவனது 21ஆவது வயதில் கிளைமோர் தாக்குதலில் இழந்துவிடுகிறார்கள். பாதுகாப்புக் கருதி மகள் பிரியாவை நஜீமா என்ற முஸ்லிம் பெயரில் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு அனுப்பிவைக்கிறார்கள். அவளது வருமானத்தில் சந்திராவின் குடும்பம் தளைக்கின்றது. இருப்பினும் பிரியாவும் மத்தியகிழக்கு எஜமானனின் பாலியல் துன்புறுத்தலுக்கு இலக்காகி நாடு திரும்புகின்றாள். சந்திராவின் மற்றொரு மகள் பிரியவதனி ஜேர்மன் மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு அவனால் ஏமாற்றப்படுகின்றாள். இவ்வாறு ஏராளமான உப கதைகளுடன் இந்நாவல் வேப்பமரமாகக் கிளைபரப்பி நிற்கின்றது. இறுதியில் சந்திராவின் குடும்பம் மீண்டும் ஒன்று சேர்கின்றது.