செ.யோகநாதன். சென்னை 600030: என்.டி.எஸ்.பதிப்பகம், 32, கிழக்கு பூங்கா சாலை, ஷெனாய் நகர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1993. (சென்னை 600005: ஜீவோதயம் அச்சகம், 65, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை). viii, 120 பக்கம், விலை: இந்திய ரூபா 20.00, அளவு: 17.5×12 சமீ. செ. யோகநாதன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க பிரபல எழுத்தாளர். ஈழத்து இலக்கியத்துறையில் முன்னோடிகளில் ஒருவர். தமிழ்த் தேசியத்திலும் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் கொண்ட இவர் ஐந்து தடவைகள் இலங்கை அரசின் சாகித்திய மண்டல பரிசு பெற்றவர். தமிழகத்திலும் தமிழக அரசின் பல விருதுகளைப் பெற்றதோடு அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியாலும் பாராட்டும் பரிசும் வழங்கப்பெற்றவர். யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. பெருமளவு சிறுகதைகளையும், குறுநாவல்களையும் எழுதியவர். கலைச்செல்வி பண்ணையில் வளர்ந்த இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 1960, 1964 களில் முகிழ்த்த சிறுகதை எழுத்தாளர் குழுமத்தில் ஒருவர். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி அவர் பல்கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்த வேளையிலேயே வெளிவந்து விட்டது. தமது குறுநாவல்களையும் மூன்று தொகுதிகளாக வெளியிட்டிருந்தார். யோகநாதன் அவர்கள் ஆரம்பத்திலே இன உணர்வு, மொழி உணர்வு மிக்கவராக தமிழரசுக் கட்சியின் பால் கவரப்பட்டவர். பின்னர் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் ஈடுபடத்தொடங்கியதும் ஒரு மார்க்சிய முற்போக்குவாதியாகி தேசியம், மண்வாசனை, யதார்த்தம் ஆகிய கரிசனைகளுக்கு உட்பட்டிருந்தார். அவர் மார்க்சிய முற்போக்குவாதியாகக் கடைசிவரை வாழ்ந்திருக்கின்றார். 1983 இலே தமிழ்த் தேசியவாதம் இவரின் கதைகளில் ஆழவே வேரூன்றி உள்ளதைக் காணலாம். இதில் மூன்று நிலை அவரிடம் இருந்திருக்கின்றது. முதலில் சமஷ்டி நிலையில் இருந்திருக்கின்றார், பிறகு கொம்யூனிஸ்ட் கட்சி முற்போக்கு எழுத்தாளராக இருந்திருக்கின்றார், பிற்காலத்திலே தமிழ்த் தேசியம் அவரது கதைகளிலே ஆழவே வேரூன்றி இருப்பதைக் காணலாம். வேரும் விழுதும் என்ற இந்நாவல் அவரது மேற்குறிப்பிட்ட கருத்தியல்களுக்கு இலக்கிய வடிவம் கொடுப்பதாக அமைந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38376).