உசுல பி.விஜயசூரிய (சிங்கள மூலம்), தேவா (தமிழாக்கம்). சென்னை 600005: வடலி வெளியீடு, பி-55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 136 பக்கம், விலை: இந்திய ரூபா 110., அளவு: 21.5ஒ14 சமீ., ISBN: 978-0-9919 755-7-0. 19 பாகங்களில் எழுதப்பட்ட இச்சிங்கள நாவலின் ஆசிரியர் உசுல பி.விஜயசூரிய. பெருமளவு ஆங்கில நூல்களை எழுதிய இவ்வெழுத்தாளரின் “அம்பரய” நாவல் 1970இல் வெளிவந்தது. (அம்பரய -அம்பர், ஓர்க்கோலை, மீனம்பர், செம்மீன் வயிரம், கற்பூரமணி என்னும் பல சொற்களால் குறிக்கப்படுகின்றது. ஸ்பேர்ம் திமிங்கிலத்தின் ஒர் கழிவுப்பொருள். கெட்ட நாற்றம் வீசும் அதிலிருந்து உலகின் விலை உயர்ந்த வாசனைத் திரவியத்தைத் தயாரிக்கின்றார்கள்). இந்த அம்பரயவைத் தேடி கடற்கரை எங்கும் அலையும் சுமனே என்பவனைப் பற்றிய கதையே இது. பதினாறு வயது நிரம்பிய சிறுவன் சுமனே. தாய் இறந்துவிட்டார். தந்தையார் வெலிக்கடை ஜெயிலில் இருக்கின்றார். சுமனே தனது பாட்டியுடனும்,சிரியா, றூபா என்ற இரு தங்கைமார்களுடனும் வாழ்ந்து வருகின்றான். சுமனே தான் அக்குடும்பத்தின் பொருளாதார மூலம். மீன் பிடிப்பதுடன் கூலி வேலை செய்தும் தங்கைமாரின் கல்வியில் அக்கறை கொள்கின்றான். அம்பரயவைத் தேடி அலைந்த சுமனேக்கு ஒரு தடவை அது கைக்கெட்டுகின்றது. உண்மையில் அது எப்படி இருக்கும் என்றே சுமனேக்குத் தெரியாததால் மார்ட்டீன் என்பவனிடம் அதனைக் கொடுத்து ஏமாந்து விடுகின்றான். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதைதான். அம்பரய தேடி மூர்க்கமாக அலையும் சுமனேக்கு இறுதியாகக் கிடைத்த “அம்பரய” என்ன என்பதுதான் கதை. ஒரு குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் சிறுவனாக, குழப்படிப் பையனாக, சண்டியனாக, குறும்புகள் செய்பவனாக, கசிப்பு விற்று ஜெயில் தண்டனை பெறுபவனாக எனப் பல அவதாரங்கள் எடுக்கின்றான் சுமனே. இடையிடையே நகைச்சுவை இழையோடும் விறுவிறுப்பான சம்பவங்களைக் கொண்டது இந்நாவல். கதை நிகழும் அக்காலத்தில் பிரதமராக இருந்த ஆர். பிரேமதாசாவின் கிராம மறுமலர்ச்சித் திட்டம் பற்றியெல்லாம் இந்நாவல் விபரிக்கின்றது. இடையிடையே பில்லி சூனியம் மந்திரித்தல் பேயோட்டுதல் என்று வேறு விடயங்களும் சுவாரஸ்யத்தை அதிகரிக்கினறன. ஒரு மனிதனுக்கு எத்துனை இடர் வந்த போதிலும், அவற்றையெல்லாம் முறியடித்து முன்னேற்றப் பாதையில் சென்று உயர்ந்து நிற்கின்றான் சுமனே.