அனுலா விஜேரத்ன மெனிகே (சிங்கள மூலம்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழாக்கம்). கொழும்பு: இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை வளர்க்கும் செயற்றிட்டம், மாணவ மதியுரையாளர் பணிமனை, கொழும்புப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொட்டாவ: சார பிரசுரத்தார், 1/94, அதுறுகிரிய வீதி). (8), 9-258 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 19×14 சமீ., ISBN: 955-584-259-0. ஒருவர் தான் பிறந்து வளர்ந்த பண்பாட்டைத் துறந்து புதியதொரு கலாச்சாரத்துடன் ஒன்றிவிட விரும்புகிறார் என்றால் அவர் அந்தப் புதிய கலாச்சாரத்தை மனமார விரும்புபவராக இருக்கவேண்டும். இந்தப் புதிய கலாச்சாரப் பண்புகள் அவரை முழுதாக ஆட்கொள்ளும்வரை அவர் அந்தக் கலாச்சாரத்திற்கு ஒரு அந்நியர்தான். அவர் அதன் புற ஓட்டில் ஒட்டி வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவரேயாவார். அந்தப் புற ஓட்டைக் குத்திக் கிழிக்க முயலும் ரங்கசாமி போன்றவர்கள் செயற்கைத் தோற்றம் பூண்ட ஒரு சமுதாய அலையில் அகப்பட்டு அதனால் முற்றாக அந்நியராக்கப்படுவதைத் தான் இந்த நாவல் சித்திரிக்கின்றது. நம்பிக்கைக்குப் பாத்திரமான அல்லது நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கவேண்டிய சகோதரர் கூட்டம், தமக்கிடையே துரோகிகளாக மாறிவிடும் சம்பவம் வர்க்கப்போராட்டத்தில் முடிவுறுகின்றது. ஆழ்கடலின் அடியில் மறைந்திருக்கும் ஊழித் தீ போல அது ஒரு கட்டத்தில் வெளிப்பட்டு எங்கள் அபிலாஷைகள் அனைத்தையும் பொசுக்கி விடுகின்றது. ‘வடபாகின்ன” என்ற சிங்கள மூலநூல் 1991இல் வெளிவந்தபோது அவ்வருடத்திற்கான சிறந்த நாவலுக்கான சாஹித்திய மண்டலத்தின் விருதைப் பெற்றிருந்தது. 1992ஆம் ஆண்டில் இதே நாவல் இலங்கை மக்கள் இலக்கிய விழாவில் சிறந்த நாவலுக்கான மக்சிம் கொர்க்கி விருதினையும் பெற்றது. (பெண்குதிரை முகத்தின் வடிவோடு கடலுக்குள் தங்கியிருந்து யுகாந்தத்தில் மேலே கிளம்பி உலகத்தை எரித்து விடுவதாகக் கருதப்படும் தீ – ஊழித்தீயை வடவாமுகாக்கினி என்பர். வடவை + முகம் + அக்கினி).