14852 நுண்பொருள்: அறம்-பொருள்-காமம்.

தேவகாந்தன். தெகிவளை: அகம் வெளியீடு, 29/28-1/1, சிறீ சரணங்கரா தெரு, 1வது பதிப்பு, மார்ச் 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). viii, 126 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5ஒ14.5 சமீ., ISBN: 978-624- 50300-0-2. எப்போதும் திருக்குறள் குறித்த உரைகள் தோன்றிய வண்ணமே உள்ளன. அது சமூகமும் மொழியும் சிந்தனா போக்குகளும் ஆய்வுநெறிகளும் கொள்ளும் வளர்- சிதை மாற்றத்தில் நிகழ்கிறது. நுண்பொருள் என்பது நுண்மையாகக் காணப்பட்டது என்றல்ல, நுண்மையாய்க் கிடந்த பொருளைக் கண்டடைந்தது என்ற அர்த்தத்திலேயே தேவகாந்தனின் “நுண்பொருள்: அறம் பொருள் காமம்” என்ற இந்நூலின் பயன்பாடு கொண்டுள்ளது. இலக்கிய உலகில் திருக்குறள் இலக்கியமா, நீதிநூலா என்ற வாதப் பிரதிவாதங்களில் அது நீதிநூல் தானென முடிவு சாய்வு கொள்ள ஆரம்பித்திருந்தும், அதை இலக்கியமாகவே தேவகாந்தன் தனதுஆழ்ந்த வாசிப்பினூடாகக் கண்டறிகிறார். உரையாசிரியர்கள் தமக்குள் முரண்படுவதை அறிந்து ஆச்சரியம் கொள்ளும் இவர் தனக்குள் முகிழ்க்கும் குறட்பாக்களுக்கான வேறு அர்த்தங்களுக்கு அர்த்தமிருப்பதை எண்ணி உரையற்ற தனிக் குறட்பாக்களுள் துணிந்த புகுந்து அத்தகைய அர்த்தங்களை கண்டறிந்து இந்நூலில் சுவையாகப் பதிவுசெய்கின்றார். உரையாசிரியர்களின் பாதிப்பின்றியும், மறைப் புனித மரபுகள் போன்றனவற்றின் செல்வாக்குக்கு ஆட்படாது, தன் கருத்தை வெளிப்படுத்தத் துணிந்துள்ளார். ஆசிரியர் 2004இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்த பின்னர் “வைகறை” பத்திரிகையில் “உள்ளது உணர்ந்தபடி” என்ற தலைப்பில் 22 அத்தியாயங்களில் இதனை எழுதியிருந்தார். ஏறக்குறைய அறுபது குறள்கள் அதில் இடம்பெற்றிருந்தன. அத்தொகுப்புடன் மேலும் சிலவற்றைச் சேர்த்து இந்நூலாக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்