செ.கதிர்காமநாதன் (மூலம்), அ.சிவஞானசீலன், த.அஜந்தகுமார் (தொகுப்பாசிரியர்கள்). கனடா: தேடகம், இணை வெளியீடு, கரவெட்டி: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், 1வது பதிப்பு, 2015. xix, 552 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-7756-01-1. செ.கதிர்காமநாதன் தனக்குரிய கோட்பாட்டுத் தளத்தில் நின்று கலை நேர்த்தி குன்றாமல் 1959 இலிருந்து தன் படைப்பாக்கங்களை எமக்கு வழங்கியவர். “கலையும் இலக்கியமும் மக்களுக்காக என்ற கோட்பாட்டை நான் தழுவி நிற்பவன். ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்க்கையின் பிரதிபலிப்புகளும் விளைவுகளுமே என் கதைகளின் உள்ளடக்கம். வாழ்க்கை தாங்கொணாது அழுத்திக் கொல்கின்ற சுமையாக ஏன் இருக்கின்றதென்பதைத் துருவி ஆராயும் உளப்பாங்கே எனது கதைகளின் ஊற்றுக் கண்கள்” என்று தனது எழுத்துக்கள் பற்றிப் பிரகடனம் செய்தவர். செ.க.வின் எழுத்துக்கள் துருத்திக்கொண்டு வெளியே தெரியாத நுண் உத்திகளால் ஆக்கப்பட்டவை. அவரது கதைகளின் பொருத்தமான தலைப்புகளும் கூட எளிதில் நினைவில் தங்கி நீண்டநாள் மனதில் நிலைகொள்பவை. கரவெட்டியின் பேச்சுமொழியே இவரது கதைகளின் உயிரோட்டமாக அமைகின்றது. இத்தொகுப்பில் செ.கதிர்காமநாதனின் சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், பிற படைப்புகள் என்பவற்றுடன், கொட்டும் பனி, மூவர் கதைகள், நான் சாகமாட்டேன் ஆகிய நூல்களில் இடம்பெற்ற முன்னுரை, மதிப்புரை, என்னுரை, என்பனவும், பின்னிணைப்பில் ஒரு காலத்தைய கரவெட்டியின் பேச்சுமொழி ஆவணமாக அமையும் “வழக்குச்சொல் அகரமுதற் திரட்டு”, அமரரின் “நினைவு மலர்” ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.