வள்ளியம்மை சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: தேசிய கலை இலக்கியப் பேரவை, 62, காங்கேசன்துறை வீதி, கொக்குவில் சந்தி, கொக்குவில், 1வது பதிப்பு, நவம்பர் 2019. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). xii, 119 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு: 20.5×14 சமீ. சுழிபுரத்தைச் சேர்ந்த திருமதி வள்ளியம்மை, ஈழத்தின் பொதுவுடைமைவாதியான கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் துணைவியாராவார். அரச நெசவு ஆசிரியராக கிராமங்கள் பலவற்றில் சேவையாற்றியுள்ள இவர் சில காலம் சிங்கப்பூரில் தனது மகனுடன் வாழ்ந்து வந்தவர். பின்னாளில் தாயகம் திரும்பித் தன் பூர்வமண்ணான சுழிபுரத்தில் வாழ்ந்து வருகின்றார். எண்பது வயதைத் தாண்டிய நிலையிலும் ஆர்வத்துடன் சமூக, இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். புரட்சிகரமான சமூக மாற்றத்தை அவாவும் போக்கு இவரது கதைகளிலும் கவிதைகளிலும் வெளிப்படுகின்றன. இந்நூலில் வள்ளியம்மையின் 67 கவிதைகளும், அரிவாளும் சம்மட்டியும் தாலி, ஜனாதிபதிக்கு சிங்களத்தில் கடிதம் ஆகிய இரண்டு கட்டுரைகளும், அம்மையாரின் பிள்ளைகள் வடித்த (சிறையிலிருந்து எம்மகன் எழுதிய திருமண வாழ்த்து, அம்மா) இரண்டு கவிதைகளும், பிரசவித்தாய், செத்துப்பிழைத்தாய், ஊகித்து உணர்ந்தாய், வளர்த்தெடுத்தாய், என் தொழிலைக் காத்து உன் தொழிலை இழந்தாய், அன்புடன் உணவளித்தாய், வீரமாய் எழுந்தாய், பாதை திறக்க வழிவகுத்தாய், உயிரைக் காத்தாய், உயிர் காக்கத் துணிந்தாய், பராமரித்தாய் ஆகிய தலைப்புகளிலான பதினொரு சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன. இந்நூல் அமரர் தோழர் கே.ஏ.சுப்பிரமணித்தின் மறைவின் முப்பதாவது ஆண்டு நினைவாக வெளியிடப்பட்டது.