சோழன் (புனைபெயர்: மலேயன் மணியம்). திருக்கோணமலை: மலேயன் மணியம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1966. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194A, பண்டாரநாயக்க மாவத்தை). 26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ. இலங்கையில் தமிழர் அரசியலின் முன்னோடிகளுள் ஒருவரான இ.மு.வி. நாகநாதன் (இலங்கை முருகேசு விஜயரத்தினம் நாகநாதன்) அவர்களின் வாழ்வும் பணிகளும் பற்றி எழுதப்பட்டுள்ள நூல். இவன் யார்? வாழ்க்கைக் குறிப்புகள், விடுதலை வேட்கை, செனெற்றர் நாகநாதன், பொதுச் செயலாளர் நாகநாதன், கண்டதும் கேட்டதும், களத்தில் நாகநாதன், நொடிந்த நாகநாதன், நாகநாதன் என்ற சேவகன், வாழ்க நீ எம்மான் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அமரர் நாகநாதன் கொழும்பில் மருத்துவராகப் பணியாற்றியவர். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொன்னம்பலத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர் 1947ஆம் ஆண்டில் அக்கட்சியின் செயலாளராகப் பணியாற்றினார். அதே ஆண்டில் மேலவை உறுப்பினராகத் தெரிவானார். பின்னாளில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து அக்கட்சியின் முக்கிய உறுப்பினரானார். அக்கட்சியின் செயலாளராகவும் சில காலம் பணியாற்றினார். 1952, 1956 தேர்தல்களில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் ஜி. ஜி. பொன்னம்பலத்தை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். மார்ச் 1960 தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் நல்லூர் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து சூலை 1960, 1965தேர்தல்களிலும் நல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1966 ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவானார். அன்று நல்ல உடற்கட்டுடன் ஆஜானுபாகுவான தோற்றத்தையுடைய நாகநாதனை தமிழ் மக்கள் “இரும்பு மனிதன்” என்று அன்புடன் அழைத்தார்கள். 1970 தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டவேளை சி. அருளம்பலத்திடம் 508 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.