பெ.சு.மணி (தொகுப்பாசிரியர்). சென்னை 600 108: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, 1வது பதிப்பு, மார்ச் 2005. (சென்னை 600 021: மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ்). 96 பக்கம், விலை: இந்திய ரூபா 25.00, அளவு: 21.5 x 14 சமீ. ஆய்வாளர் பெ.சு.மணி பல்வேறு இதழியல் கருத்தரங்குகளிலும் இதழியல் சார்ந்த பல கட்டுரைகளைப் படித்தவர். ‘விடுதலைப் போரில் தமிழ் இதழ்கள், பழந்தமிழ் இதழ்கள்” என்னும் இவரது நூலைத் தொடர்ந்து சுவாமி விபுலாநந்தர் பல்வேறு இதழ்களிலும் வெளியிட்ட தலையங்கங்களின் தொகுப்பாக இந்நூலை வெளியிட்டுள்ளார். சுவாமி விபுலானந்தர், இராமகிருஷ்ண மிஷன் நடத்திய ‘ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்” என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும், ‘வேதாந்த கேசரி” (Vedanta Kesari) என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகவிருந்து பல அரிய கட்டுரைகளையும் தலையங்கங்களையும் எழுதியிருந்தார். மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டித பரீட்சையின் பரீட்சார்த்தகராக நியமிக்கப்பட்ட இவர், தமிழ்ச் சங்க வெளியீடான ‘செந்தமிழ்” எனும் சஞ்சிகையில் இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்தும் எழுதி வந்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள், ‘மதங்க சூளாமணி” என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. சுவாமி விபலானந்தர் எழுதிய ஆசிரியர் தலையங்கங்களை இந்நூல் தாங்கிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38677).