அ.ஸ.அகமட் கியாஸ். அக்கரைப்பற்று-2: இலக்கிய மாமணி ஆ.சா.அப்துஸ் சமது வெளியீடு, 228, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (அக்கரைப்பற்று-01: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட்).
xv, (4), 129 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22.5×16 சமீ., ISBN: 978-955-44457-1-0.
நாடறிந்த எழுத்தாளர் இலக்கியமாமணி மர்ஹூம் அ.ஸ.அப்துஸ் ஸமது நினைவாக அவரின் புதல்வன் அ.ஸ.அகமட் கியாஸ் எழுதிய “எல்லாப் பூக்களுமே அழகுதான்” என்ற வாழ்வியலுக்கான அறிவியல் சிந்தனை நூலின் வெளியீட்டுவிழா 2.3.2019 அன்று அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் நடைபெற்றது. நூலாசிரியர் சம்மாந்துறை வலய நிருவாகத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றுபவர். இந்த நூலுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான அரச இலக்கிய விருது வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவரது இரண்டாவது நூல் இதுவாகும். ‘யன்னலைத்திற” என்ற நூல் இவரது முதல் நூலாகும். எல்லாப் பூக்களுமே அழகுதான், ஒரு முத்தம் தந்த விலை, மரணம் சுகமானது, தொட்டால் தான் பூ மலரும், கண்ணுக்கு மை அழகு, அவளை மன்னித்திருக்கலாமே, திறந்த ஜன்னல்கள், பிரச்சினையை வரவேற்போம், மேகங்களை விலக்கி, பூக்கள் கோபிப்பதில்லை, கவனம் பூக்கள் வாடிவிடும் ஆகிய பதினொரு தலைப்புகளில் மனித மேம்பாட்டுக்கான இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. பிரச்சினையை வரவேற்போம் என்ற கட்டுரையில் ஆசிரியர் நமது பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி என்று எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார். மேகங்களை விலக்கி என்ற கட்டுரை கண்ணால் காண்பதுவும் காதால் கேட்பதுவும் பொய் என்றும் தீர விசாரிப்பதே மெய் என்றும் விளக்குகிறார். பூக்கள் கோபிப்பதில்லை என்ற கட்டுரையின் மூலம் நமது கோபத்தைப் பார்த்து நாமே வெட்கித் தலை குனிய வைத்திருக்கிறார்.