வை.க.சிற்றம்பலம் (மூலம்), சி.சிவானந்தராஜா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சி.சிவானந்தராஜா, செட்டிகுறிச்சி, பண்டத்தரிப்பு, 1வது பதிப்பு, நவம்பர் 2020. (யாழ்ப்பாணம்: சாய்ராம் பிரின்டர்ஸ், சங்கானை).
vii, 97 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15.5 சமீ.
வை.க.சிற்றம்பலம் அவர்கள் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பாலபண்டிதர், இளம் தமிழ்ப் புலவர் போன்ற பட்டங்களைப் பெற்றபின் மதுரை பண்டித வகுப்புகளிலும் முழுமையாகக் கலந்துகொண்டவர். தனதூர்க் குலதெய்வமான இணுவில் சிவகாமி அம்மை மீது இவர் பாடிய பிள்ளைத் தமிழ் இலக்கியம் இதுவாகும். இவர் தமது பிள்ளைத் தமிழில் சிவகாமி அம்மையைக் குழந்தையாகக் கருதி பத்துப் பருவங்களிலும் அழகுற பாடல்களை இயற்றியுள்ளார். மேலும் அன்னையின் திருவிளையாடல்களையும் அன்னையை வணங்கித் துதித்த பேராயிரவர், முதலித்தம்பி, சின்னத்தம்பிப் புலவர், சந்நாசியார், சாத்திரம்மா என்போர்களது தொண்டுகளையும் புகழ்ந்து பாடியுள்ளார். பிள்ளைத் தமிழ் என்பது புலவர்களால் தமது உள்ளங்கவர்ந்த தலைவனையோ தலைவியையோ குழந்தையாக உருவகித்து பத்துப் பருவங்கள் கொண்டதாகப் பாடப்பெறும் பக்தி இலக்கியமாகும். வை.க.சிற்றம்பலம் அவர்கள் 1970ஆம் ஆண்டு முதலாக பல்வேறு பக்திப் பிரபந்தங்களையும் பாடிவந்துள்ளார். அவற்றுள் நான்மணிக்கோவை (4), மும்மணிக்கோவை (3), திரு இரட்டைமணிமாலை (3), ஒருபா ஒருபது (4), திருவூஞ்சல் (6), பிள்ளைத் தமிழ் (1), திருப்பள்ளியெழுச்சி (1), கலம்பகம் (1), இணைமணிமாலை (1), அந்தாதி (1), ஆற்றுப்படை (2), திருப்பதிகங்கள் (2), இடர்களைப்பதிகம் (1), திருவர்க்கமாலை (1) ஆகியவை அடங்குகின்றன.