15156 தமிழர் பண்பாட்டில் மார்கழி: ஒரு மரபுத் திங்கள்.

மனோன்மணி சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, இல. 90, ஞானவைரவர் வீதி, கோண்டாவில்,1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).

viii, 65 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-43934-0-0.

மனிதன் தன்னைச் சூழவுள்ள இயற்கையோடு இயைபுபட்டு மகிழ்வாக வாழ்வதை வழிபாடு நெறிப்படுத்தியது. அந்த இயற்கையை இறை உருவாகவும் ஆற்றலாகவும் கண்டு பணிந்து வாழும் மனப்பக்குவத்தை நல்கியது. அத்தகைய மனப்பக்குவத்தைப் பெற்றவர்கள் தமது பட்டறிவைப் பாடல்களிலே பதிவுசெய்து வைத்துள்ளனர். சிறப்பாகத் தமிழ்மொழியிலே பாடப்பட்ட பாடல்கள் இன்றுவரை நிலைத்துள்ளன. காரைக்கால் அம்மையார் தொடக்கிவைத்த இப்பாடல் மரபு, பக்திப்பாடல் மரபாகப் பின்வந்த சமயங்களாலும் பேணப்பட்டுள்ளது. சமணம், பௌத்தம், இஸ்லாம்,  கிறிஸ்தவம் போன்ற சமயங்களும் தத்தம் சமயக் கருத்துக்களைத் தமிழரிடையே பரப்பத் தமிழ் மொழியிலேயே பக்தி இலக்கியங்களை ஆக்கினர். சீவகசிந்தாமணி, மணிமேகலை, சீறாப்புராணம், தேம்பாவணி என்னும் நூல்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை. காரைக்காலம்மையாருக்குப் பின்வந்த ஆண்டாளும் மணிவாசகரும் இயற்கையையும் காலத்தையும் இணைத்துப் புதியதொரு வழிபாட்டு மரபை வளர்த்துச் சென்றனர். விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பால் காலம் கடிகாரத்திலும் நாட்காட்டிகளிலும் வகுக்கப்பட்டது. ஆண்டாள் இப்புதிய செயற்பாடு தோன்றுவதற்கு முன்னரே காலத்தை வகுத்து வழிபாட்டு மரபாகப் பதிவுசெய்துள்ளார். ஆண்டாளின் புதிய மரபை மணிவாசகரும் பின்பற்றினார். இச்சிறுநூல் அக்காலமும் வழிபாடும் இயைந்த வழிகாட்டும் மரபை விளக்க முற்பட்டுள்ளது. இந்நூல் தமிழர் பண்பாட்டில் ஓர் மரபுத் திங்கள், திருப்பாவையும் திருவெம்பாவையும், பாடற்பொருள், பாடல்களின் கட்டமைப்பு- திருப்பாவை, மார்கழித் திங்களின் வரையறை, நோன்பு நடைமுறைகள், நோன்பின் பயன், வழிபடும் முறைமை, துயில் எழுப்பல், அருள் வேண்டல், வழிபாட்டுறுதி செய்தல், பாடல்களின் கட்டமைப்பு- திருவெண்பாவை, துயிலெழுப்பல், வழிபாட்டு நோக்கம், வழிபாடு உசாவல், நீராடுதல், மழை வேண்டல், வழிபாட்டுறுதி கூறல், வழிபாட்டு மரவு, இரு பாவைப் பாடல்களினதும் ஒருமைப்பாடு, பாடல்களின் வேறுபட்ட நிலை, புதியதொரு பக்தி மரபு, பாவை வழிபாட்டைத் தொடர்தல், வீட்டுநிலை வழிபாடு, திருக்கோயில் நிலை, தமிழர் புலம்பெயர் நாடுகளில் மார்கழித் திங்கள் ஆகிய 26 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: ஐந்தாவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு.  15974

ஏனைய பதிவுகள்