கனகசபாபதி சரவணபவன். திருக்கோணமலை: திருககோணமலை வெளியீட்டாளர்கள், 346, அன்புவழிபுரம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2020. (சென்னை 600026: குமரன் பதிப்பகம், 3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது தெரு, வடபழநி).
x, 252 பக்கம், விலை: இந்திய ரூபா 250., இலங்கை ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-38500-0-3.
இந்நூல் புனைவோ நாவலோ இல்லை. கற்பனைப் பாத்திரங்களின் உரையாடல்களினூடாக கிழக்கின் பழங்குடியினரின் வாழ்வனுபவம் பேசப்படுகின்றது. புழுதி கிளம்பும் கிராமிய மண்ணில் இருந்து கேட்கும் உரையாடல்களுக்குள் புதைந்து கிடக்கும் வலிகள், சுவாரஸ்யங்கள் நிறைந்த வாழ்க்கை வரலாறு எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத் தரிசனம் தருவதில்லை. இன்று அவர்கள் வாழ்க்கை மாறுபட்ட பெருவெளிக்குள் பெரும் மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. பழங்குடிகள் வாழும் பிரதேசம் மிகத் தொன்மையான பண்பாட்டு வேர்களைக் கொண்டது. வேடர்கள், கோடங்கிகள், யாவகர்கள், பசினர்கள், நீக்கிரோக்கள், சீனர்கள், பறங்கிகள் என கிழக்கிலங்கையின் ரசனை நிறைந்த வானவில் சமூகங்களின் வாழ்க்கைத் தரிசனத்தை தேடும் முயற்சி இது. கிழக்கின் பழங்குடிகள்/ வேட்டை/ ஹீடாக்காடு வேலு (ஜக்கம்மா, இலங்கை வருகை, தெலுங்கு நகர், கொண்டாட்டம், குடுகுடுப்பை)/காப்பிரிகள்: காலனித்துவத்தின் ஓர் உயிரியல் அடையாளம்/ வேடர் பாடல்கள்/ ஐரோப்பிய நாடோடிக் குறவர்கள்-ஓர் அறிமுகம் ஆகிய ஆறு பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.