எச்.எம்.பி.முஹிதீன். கொழும்பு 3: இஸ்லாமிய சோஷலிஸ முன்னணி வெளியீடு, 35, பெண்டனிஸ் அவென்யூ, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1969. (மருதானை: குணரத்தின அன்ட் கொம்பனி).
(4), 20 பக்கம், விலை: 30 சதம், அளவு: 21×14 சமீ.
இலங்கை இஸ்லாமிய சோஷலிஸ முன்னணியின் ஸ்தாபன அமைப்பின் பிரச்சார காரியதரிசியான எச்.எம்.பி.முஹிதீன் அவர்கள் எழுதியுள்ள இந்நூலில் பைத்துல் முகத்தஸில் தீ, என் அபிப்பிராயம், ஏன் சம்பதித்தேன், பொறுப்புக்கள், திடீர் அறிக்கை, தீர்மானங்கள், எல்லாம் ஐக்கியத்திற்கு, திடுக்கிடும் செய்திகள், இறைவன் தண்டிப்பான், ஊர்வலத்தில் அரசியல், தீர்மானம் இல்லை, ஒருமைப்பாட்டுக்குச் சாவுமணி, கூட்டம் பயனடைய, அரசியல் புகுந்தது, கூட்டம் நீதிக்காகவா?, முஸ்லிம் லீக் அறிக்கை, அரசியல் உண்டா?, காபீர் கதை, குழப்பியது யார்? கோட்டை தகர்ந்தது ஆகிய இருபது தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ரஷ்ய சார்பு கம்யுனிஸ்டாகவும் பின்பு சீன சார்பாளராகவும் மாறியவர் ”எச்.எம்.பி” என அழைக்கப்பட்ட எச்.எம்.பி.முஹிதீன் அவர்கள். 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் பணியில் அமர்ந்திருந்தார். வட கொரியாவின் கிம் இல் சுங்கை தமிழுக்கு மொழிபெயர்ப்பு நூல்களின் வழியாக அறிமுகப்படுத்தியதன் எதிரொலியாக அவர் 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் போது கைதாகி சிறை வைக்கப்பட்டிருந்தார் என அவரது நண்பரான எழுத்தாளர் முருகபூபதி தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். தினகரனில் அபியுக்தன் என்ற பெயரில் பத்தி எழுத்தாளராகப் பணியாற்றியிருக்கிறார். 1974இல் எழுதப்பட்ட அவரது “அறிஞர் அஸீஸ் சில நினைவுகள்” என்ற நூல் முக்கியமானது.