தமிழாகரர் (மூலம்), இ.சி.இரகுநாதையர் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: இ.சி.இரகுநாதையர், சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், 1வது பதிப்பு, 1930. (யாழ்ப்பாணம்: சோதிடப் பிரகாச யந்திரசாலை, கொக்குவில்).
44 பக்கம், விலை: 6 அணா, அளவு: 21.5×14 சமீ.
ஆசௌச தீபிகை என்பது பிறப்பு, இறப்புகளால் உண்டாகும் விலக்குகளை (துடக்குகளை) விளக்கும் நூல். சைவத்தின் இருபத்தெட்டு(28)ஆகமங்களிலும் ஆசௌச விதி என்று ஒரு அத்தியாயம் உள்ளது. இவை விரிவாகவும் ஒன்றுக்கொன்று சில வேறுபாடுகளுடனும் இருப்பதால், ஆசௌசம் பற்றிய விபரங்கள் மட்டுமே உள்ளதான ஆசௌச தீபிகை என்ற தமிழ் நூல் பயனுள்ளதாக உள்ளது. இதனை 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழாகர முனிவர் இயற்றினார். ஆசௌச தீபிகையை யாழ்ப்பாணம் வண்ணை மா.வைத்தியலிங்கபிள்ளை 1882 இல் முதலில் அச்சிட்டு வெளியிட்டார். துன்னாலை ஆ.சபாரத்தினக் குருக்கள் தமிழ் ஆசௌச தீபிகைக்குத் தாத்பரிய உரை தந்துள்ளார். பருத்தித்துறையில் இது அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. பின்னாளில் கொக்குவில் இ.சி. இரகுநாதையர் ஆசௌச தீபிகைப் பதிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இதுவே அப்பதிப்பாகும். ஆசௌச லட்சணம், ஆசௌச நிமித்தம், சனனம், பூரணாசௌச சங்கை, வருணாச்சிரமம், சிவாச்சிரமம், சைவபேதம், புறநடை, சற்சூத்திர லட்சணம், அவாந்தரசமய விசேடம், பஞ்சாசாரியர், உருத்திரகணிகை முதலெழுவர், திராவிட காயகன், அநுலோமர், தாசர், தூதப்பார்ப்பான், கைக்கோளன் முதலினோர், சனனாதிக்கிரமமும் சுமரணத்தில் ஆண் மரணமும், நாமகரணாதிகளுக்குக் காலநியமம், சுமரணத்திற் பெண் மரணம், விசேடம், திரிதினம், பக்கினி, எகதினம், சத்தியச்சுத்தி என இன்னோரன்ன தலைப்புக்களில் பிறப்பினால் உண்டாகும் விலக்குகள் பற்றி இந்நூல் விளக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 02443).