இ.தனஞ்சயன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: இலங்கைத் தமிழியற் கழகம், கொழும்புத்துறை, 1வது பதிப்பு, 2020. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை).
131 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 1000., அளவு: 17.5×25 சமீ., ISBN: 978-624-53810-0-5.
ஓவியக் கலைஞர்களைப் பற்றியும் அவர்களது அருந்திறன் குறித்தும் நற்றிணை, மதுரைக் காஞ்சி போன்ற சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. நற்றிணைப் பாடல் (118:7) ஒன்று ஓவியரை ‘ஓவ மாக்கள்’ என்கிறது. ஓவியம் புலப்படுத்தும் கருத்தைக் குறிப்பிடும் போது ‘ஓவச் செய்தி’ என்று அகநானூறு (5:20) தெரிவிக்கின்றது. இந்நூலில் அமரர் மு.கனகசபையின் ஓவியச் சேர்க்கைகள் வண்ண ஓவியங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவரது ஓவியப் பணி பற்றிய விரிவான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமரர் மு.கனகசபை அவர்கள், மனப்பதிவு ஓவிய முறைமையைக் கையாண்டவர் என்ற வகையால் ஈழத்தின் பிற ஓவியர்களிலில் இருந்து தனித்துவமாக மிளிர்பவர். ஈழத்தமிழர் வாழ்வியலில் மறைந்துவிட்ட பண்பாட்டு அம்சங்கள் பலவற்றையும் அவர்களது போராட்ட வாழ்வின் இன்னல்களையும் இவரது ஓவியங்கள் நன்கு பிரதிபலிக்கின்றன. அவ்வகையில் அவை ஈழத்தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்தி நிற்கின்றன. தொகுப்புரை, ஓவியர் மு.கனகசபையும் அவரது ஓவியங்களும் (க.இரகுபரன்), மு.கனகசபையின் ஓவியங்களும் இனவரைபியல் வரைபடவாக்கமும் (தா.சனாதனன்), ஓவியர் மு.கனகசபை (அ.யேசுராசா), வரைதல்கள், வெட்டுருக்கள், நீர்வர்ண ஓவியங்கள், எண்ணெய் வர்ண ஓவியங்கள், ஓவியரின் சுயவிபரம், பின்னிணைப்புகள் ஆகிய 10 அத்தியாயங்களாக இந்நூல் விரிகின்றது. பின்னிணைப்புகளாக ஓவியக்கலை (மு.கனகசபை), ஓவியக்கலை (மு.கனகசபை), நேர்காணல் (ஓவியர் ஆசை. இராசையா) ஆகிய மூன்று ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.