க.ஜெயசீலன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(6), 50 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 19.5×19.5 சமீ., ISBN: 978-955-659-681-6.
சிறுபான்மையினங்கள் தமது வரலாற்றையும் அடையாளத்தையும் ஆவணப்படுத்தல், அதனைப் பாதுகாத்தல், எதிர்காலச் சந்ததிக்கு கடத்துதல் என்பது அத்தியாவசியமான ஒன்றாக இன்று மாறியுள்ளது. இந்தப் பின்னணியில் க.ஜெயசீலனின் ‘யாழ் வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய கூரை ஓவியங்கள்’ என்ற நூலின் முக்கியத்தவத்தினைக் குறைத்து மதிப்பிட முடியாது. தனது நுண்கலைமாணிப் பட்டத்திற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையை ஜெயசீலன் இதனூடு பொது வெளிக்குக் கொண்டு வருகிறார். ஏற்கெனவே அவரது ஆய்வு கோவில் நிர்வாகத்தால் இக் கூரையோவியம் வெள்ளையடிக்கப்படுவதை அல்லது மறுவடிவமைக்கப்படுவதைத் தடுத்துள்ளது. மேலும், இக் கூரை ஓவியங்கள் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர சித்திரப் பாடத் திட்டத்தில் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதிலுமிருந்து தமிழ்-சிங்கள மொழிமூல மாணவர்களுக்கான ஒரு கல்விச் சுற்றுலா மையமாக இன்று இது மாறிவருகின்றது. இந்நூல் கோயில் நிர்வாகிகள், வல்வெட்டித்துறை மக்கள், தொல்லியல் திணைக்களம், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என்பவர்களின் ஓவியம்சார் தேடலுக்கான வழிகாட்டியாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. யாழ்.உடுப்பிட்டியைச் சேர்ந்த கனகசபாபதி ஜெயசீலன் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியின் பழைய மாணவர். யாழ்.பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் இளமாணிப் பட்டம் பெற்றவர். ‘சித்திரக் கலை’ என்ற நூலின் ஆசிரியரான இவர் தற்போது கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.