வி.கௌரிபாலன் (தொகுப்பாசிரியர்). திருக்கோணமலை: அமரர் கதிரவேற்பிள்ளை விஸ்வலிங்கம் ஞாபகார்த்த வெளியீடு, 570ஃ6, கிருஷ்ணபுரி, உப்புவெளி, இணை வெளியீடு, நாடகப் பட்டறை ஒழுங்கமைப்பு, ஆங்கில மொழிப் போதனைப் பிரிவு, கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜ{ன் 2012. (திருக்கோணமலை: அஸ்ட்ரா பிரின்டர்ஸ் நிறுவனம்).
64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
ஈழத்தமிழரது ஆங்கில நாடக அரங்கு பற்றியும், குறிப்பாக சொந்தமாக உருவாக்கப்பட்டு வருகின்ற நாடகப் பனுவலாக்கம் பற்றியும், கூட்டாக்கப் புதிதளித்தல் முறையிலான நாடகப் பனுவலாக்க முறைமை பற்றியும் அறிந்துகொள்வதற்குமான திறவுகோலாக இந்நூல் அமைந்துள்ளது. வி.கௌரிபாலனின் தந்தையாரான அமரர் கதிரவேற்பிள்ளை விஸ்வலிங்கம் (10.04.1934-02.05.2012) ஞாபகார்த்த வெளியீடாக இந்நாடக நூலை வெளிக்கொணர்ந்துள்ளார். சிறுகதை உருவாக்கம், நாடகப் பனுவலாக்கம், குழுநிலையில் படைப்பாக்கம், மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு பயிற்சி முறைகளின் விளைவுகளையும், அனுபவங்களையும் உள்ளடக்கியதாக இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வி.கௌரிபாலனின் ‘நீ அழைத்ததாக ஒரு ஞாபகம்’ என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாடகம், சமகாலத்தில் ஆங்கிலத்தில் எஸ்.எம்.பீலிக்ஸ் அவர்களாலும் தமிழில் வி.கௌரிபாலன் அவர்களாலும் எழுத்துப் பனுவலாகப் பரிணமித்திருக்கிறது. இப்படைப்பாக்கம் குழுநிலையிலான கலந்துரையாடல்கள், உருவாக்கங்கள், மதிப்பீடுகள் எனப் பல்வேறு வடிவங்களில் எழுதப்பட்ட அரங்கியலாளர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. இந்த வகையில் மாற்றுப் படைப்பாக்க முறையாகவும், கல்வி முறையாகவும் அமையும் கலைச் செயற்பாட்டின் பதிவாகவும் இந்நூல் அமைகின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13814).