ஆ.மு.சி.வேலழகன். மட்டக்களப்பு: இளவரசி உதயசூரியன் பதிப்பகம், வள்ளுவன் மேடு, மாவேற்குடாப் பிரிவு-01, திருப்பழுகாமம், பெரியபோரதீவு, 1வது பதிப்பு, கார்ததிகை 2018. (கொக்கட்டிச்சோலை: அக்ஷயன் அச்சகம், பிரதான வீதி).
86 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-7300-06-1.
ஆ.மு.சி.வேலழகனின் 31ஆவது நூலாக வெளிவரும் இப்படைப்பாக்கத்தில் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் மீளெழுச்சியும், அச்சங்கம் எதிர்நோக்கிய சவால்களும் கடந்த 8 ஆண்டுகளாக அச்சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்ப் பணிகளும் நூலாசிரியரின் அனுபவத்தினூடாக இந்நூலில் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் கிழக்கிலங்கையின் தமிழறிஞர்கள், இலக்கிய கர்த்தாக்கள் மற்றும் தமிழார்வலர்கள் ஆகியோரின் ஏகோபித்த ஆதரவுடன் 01.11.1967இல் நிறுவப்பட்டதாகும். இதன்போது காப்பாளர்களாக அரச அதிபர் செ.கதிர்காமநாதன், பட்டிருப்புத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் சீ.மு. இராசமாணிக்கம், ஆசிரிய சிரோண்மணி வே. சாமித்தம்பி ஆகியோரும், தலைவராக புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்களும் தெரிவாகியிருந்தனர். அதன்பொதுச் செயலாளராக வித்துவான் க.செபரெத்தினமும், பொருளாளராக பிரசித்த நொத்தாரிஸ் பண்டிதர் க. தம்பிப்பிள்ளையும் தெரிவாகினர். சங்கச் செயற்குழு உறுப்பினராக வித்துவான் எப்.எக்ஸ். சி. நடராசா, பண்டிதர் செ. பூபாலபிள்ளை, பண்டிதர் ஆ. சபாபதி, பண்டிதர் விசுவலிங்கம், பண்டிதர் ந. அழகேசமுதலி, பண்டிதர் சைவப்புலவர் வி.ரி. செல்லத்துரை, அன்புமணி இரா. நாகலிங்கம், எழுத்தாளர் ரி. பாக்கியநாயகம், மூனாகானா (மு. கணபதிப்பிள்ளை), அருள் செல்வநாயகம், மண்டூர் புலவர் மு. சோமசுந்தரம்பிள்ளை, வித்துவான் சா.இ. கமலநாதன், வே. சிவசுப்பிரமணியம், த. செல்வநாயகம் எனப் பதினைந்து தமிழறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். சுமார் 30 ஆண்டுகளாக அக்காலத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளால் தமிழ்ச் சங்கம் தனது பணிகளைத் தொடர முடியாமல் போயிற்று. இதன் பின்பு 2003 காலப் பகுதியில் புனரமைப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. நிர்வாகங்களும் தெரிவு செய்யப்பட்ட போதும் அக்காலச் சூழலில் அது முழுமை பெறவில்லை. இத்தகைய பின்னணியில் இதன் நிறுவனர்களில் ஒருவரான கனடாவில் வாழ்ந்து கொண்டிருந்த வித்துவான் தமிழ்மொழி க. செபரெத்தினம் மீளவும் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தை கட்டியெழுப்பத் திடசங்கற்பம் பூண்டவராக 2010 புரட்டாதியில் நாட்டுக்கு வருகை தந்து இங்குள்ள தமிழ் ஆர்வலர்களுடன் மிகநெருக்கமாகத் தொடர்பு கொண்டு முழுமூச்சுடன் ஈடுபட்டார். அவ்வாறு புனரமைக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்ப் பணிகளோடு, மேற்படி காணி, கட்டடம் தொடர்பான செயற்பாடுகளும் தொடர்ந்தன. இன்று இருநூற்றுக்கும் அதிகமான தமிழ் ஆர்வலர்களை தனது உறுப்பினர்களாகக் கொண்டு தலவிருட்சமாக கிளை பரப்பி நிற்கும் இச்சங்கத்தின் மீளெழுச்சி தொடர்பான அவணங்களை இந்நூல் கொண்டுள்ளது.