மு.ராம்கி. ஒலுவில்: தமிழ் இசை வட்டம், தென் கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, நவம்பர் 2017. (அக்கரைப்பற்று 02: சிற்றி பொயின்ற் பிரின்டர்ஸ், உடையார் வீதி).
xxii, 70 பக்கம், விலை: ரூபா 300.00, அளவு: 20×15 சமீ., ISBN: 978-955-38706-0-5.
நுவரெலியாவைச் சேர்ந்தவர் என்பதால் மலையகக் காற்றை சுவாசித்து காற்றில் வரும் களங்கத்தை கவிதை இலக்கியம் மூலம் வடிகட்ட நினைப்பவராக இக்கவிஞர் தன்னை முன்நிறுத்துகின்றார். அதனால்தான் எதிர்ப்பு இலக்கியங்களை அதிகம் படிப்பவராகவும் படைப்பவராகவும் இக்கவிஞர் திழ்ந்துவந்ததுடன் இயற்கை நிகழ்வுகளை தனது குறிப்பேற்றி கூறும் தன்மை கொண்டவராகவும்; காணப்படுகிறார். ‘சமூகத்தில் இடம்பெறும் சில சம்பவங்கள் என் ஆழ்மனதைத் தாக்கும்போதும் அவ்வுணர்வெழுச்சியால் உந்தப்பட்டு பிறந்தவைகளாக எனது கவிதைகள் அமைகின்றன. சமூகச் சீர்கேடுகளைக் காண நேரிடும்போது அவற்றை நிவர்த்திசெய்ய மனமிருந்தும் பலம் இல்லாத சந்தர்ப்பங்களில் ஆற்றாமையை போக்கிக்கொள்ள துணை நின்றவைகளாக இக்கவிதைகள் அமைகின்றன. என் கவிதைகள் தேயிலை முதல் கடலலை வரைக்குமான எல்லைகளுக்கிடையிலான கருப்பொருளையே பெரும்பாலும் கொண்டிருக்கின்றன’ என்று தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். தென் கிழக்குப் பல்கலைக்கழக மாணவரான மு.ராம்கியின் முதலாவது கவிதைத் தொகுதி இது.