நெற்கொழுதாசன். சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, மே 2016. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைஸஸ் பிரிண்டர்ஸ்).
88 பக்கம், விலை: இந்திய ரூபா 80.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-929715-8-2.
கவிஞர் நெற்கொழுதாசனின் 59 கவிதைகளின் தொகுப்பு இது. ‘வல்லை வெளி’ யின் நினைவில் பனிபடர்ந்த தேசங்களில் பாதம் பதிக்கவியலாத மன அவதியை கொண்டிருக்கும் இக்கவிதைகள், இன்னுமின்னும் நாம் புரிந்து கொள்ள வேண்டிய அகதி இருப்பின் கவிகளாக தோன்றுகிறது. பலாத்காரமாய் விரட்டியடிக்கப்பட்டதொரு அகதியின் அலைவை வீதியெங்கும் அழுகையோடும் ஆத்திரத்தோடும் இறைத்துப் போகும் ஒரு குழந்தையைப் போல் வெளிப்படுத்திச் செல்கிறது நெற்கொழுதாசனின் இக்கவிதைகள். ‘இந்தக் கவிதைகள் நிகழ்த்தப்பட்ட காலமும் உங்கள் முன்னே கடந்துதான் சென்றிருக்கிறது. நானும் நான் சார்ந்த சூழலும் இங்த காலத்தில் என்னவாக எப்படியாக இருந்தோம் என்பதனை இந்தக் கவிதைகளூடாக தீர்மானித்து விடுவீர்கள். உங்களுக்கும் காலத்துக்கும் எனக்குமான ஒரு நுண்ணிய தொடர்பினை எங்காவது ஒரு சொல் உயிர்ப்பித்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. வலிகளும் வாதைகளும் என்னையும் அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறது. எப்படி மீள்வதென்று தெரியாமலேயே அந்த வலிகளோடு சொற்களைப் பிணையவிட்டுவிட்டேன். மோகித்திருந்த கணங்களில் மோகத்தையும், தனித்திருந்த கணங்களில் தனிமையையும் அப்படியே இறக்கிவைத்தும் இருக்கிறேன். எல்லாத் திசைகளிலும் அன்பும் பிரியமும் படர்ந்து என்னைமூடி மூழ்கடிக்கின்றன. ஏனோ தெரியவில்லை அவை எனக்கு பயத்தையும் திகிலையுமே தருகின்றன. மிகக் குறைபாடுள்ள ஒரு மனிதனாக அன்பையும் நேசிப்பையும் கண்டு மிரண்டு ஓடத் துணிகிறேன். அன்பாலானதெல்லாம் பெருந்துயரானது என்று சொற்களை எடுத்து அவற்றின் மீது வீசியும் விடுகிறேன். அந்த சொற்கள் தாவீதின் கவண் கல் போல உங்களைத் தாக்கியும் விடுகிறது. சில நேரம் அந்தச் சொற்கள் திரும்பிவந்து என் கன்னத்தில் அறைந்தும் விடுகிறது. அப்படி வீசிய சொற்களில் உருவாகியவையும் நிறைந்தே கிடக்கின்றன. இவை தவிர்த்து இந்தக் கவிதைகள் பற்றி நான் என்ன பேசிவிட முடியும்” (என்னுரையில், நெற்கொழு தாசன்).