15629 இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம்.

 கோ.நடேசையர்(மூலம்), அந்தனி ஜீவா (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, மீள்பதிப்பு, 2018, 1வது பதிப்பு, 1937. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 130 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-524-6.

இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மக்களின் சகாப்த நாயகனாகத் திகழ்ந்த கோ.நடேசையரின் ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர்களின் அந்தரப் பிழைப்பு” என்ற இந்த நாடக நூல் ஒரு வரலாற்று ஆவணமாகும். இலங்கையின் முதல் அரசியல் நாடகநூல் என்ற சிறப்பு இதற்குண்டு. பன்முக ஆற்றல் கொண்ட கோ.நடேசையர் பத்திரிகையாளராக, தொழிற்சங்கவாதியாக, அரசியல்வாதியாக அறியப்பட்டவர் இந்நாடக நூலின் மூலம் தம்மை ஒரு நாடக ஆசிரியராகவும் நாடக வரலாற்றில் பதிவுசெய்துகொண்டார். பாமர மக்களும் விளங்கிக்கொள்ளும் மொழியிலும் இசைப் பாடலிலும் அரசியல் நாடகமாக உருப்பெற்றுள்ள இந்த நாடக நூலிற்கு நடேசையர் எழுதியிருக்கும் முகவுரை இலங்கையில் வாழும் இந்தியத் தொழிலாளர்களின் நிலைமை பற்றிய அரசியல் பிரகடனமாகும். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் தோட்டத் தொழிலாளர்கள் ஆசைவார்த்தை காட்டிய ஆள்காட்டிக் கங்காணிகளால் ஏமாற்றப்பட்டுக் கடத்தப்பட்டு வருபவர்கள்தானே தவிர, தமது சுயவிருப்பின் தெரிவில் வருபவர்கள் அல்லர் என்பதை இந்நாடக நூலில் ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். இத்தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டவர்கள் என்பதுதான் அவர் உணர்த்தவிரும்பும் உண்மையாகும். கடலுக்கு இந்தப் பக்கமும் நிம்மதியில்லை, சென்ற இடத்திலும் நிம்மதி இல்லை. உடனே திரும்பவும் வழியில்லை இரண்டும் கெட்டான் நிலையாக ‘அந்தரத்தில் தொங்கும்’ வாழ்விற்கு என்ன வேண்டும்? தனக்கென உரிமை வேண்டும், அதற்கு ஓர் தொழிற்சங்கம் வேண்டும், எனத் தொழிலாளிகள் முடிவு செய்வதாக நாடகம் நிறைவு பெறுகிறது. இந்த நாடகம் எழுதப்பட்ட காலத்தையும் எழுதிய ஆசிரியரின் தொலைநோக்குப் பார்வையையும் நாம் உற்று நோக்கினால் இந்தப் படைப்பின் வலிமை புரியும். தான் ஒரு காங்கிரசு கொள்கை உடையோராக, காந்தியத்தின் ஆதரவாளராக இருப்பினும் வர்க்க ஒற்றுமையே தொழிலாளிக்கு விடிவைத் தரும் என்கிற உள்ளடக்க அரசியலை நாடகத்தில் முன் வைத்திருக்கிறார். இந்நாடகத்தின் பாடல்கள் ஆசிரியரின் துணைவியார் ஸ்ரீமதி கோ.ந.மீனாட்சியம்மாளால் இயற்றப்பட்டவை.

ஏனைய பதிவுகள்