15696 Cass அல்லது ஏற்கெனவெ சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை.

உமையாழ். சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 214, புவனேஸ்வரி நகர் 3வது மெயின் ரோடு, வேளச்சேரி, 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ்).

150 பக்கம், விலை: இந்திய ரூபா 175., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-881333-5-5.

உள்ளே சிறியதும் பெரியதுமாக ஒன்பது கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஊர்க்கத, நின் கூடுகை, காதுப்பூ, அரூபம், சபிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை, மேய்ப்பர், வேரோடி, Cass அல்லது ஏற்கெனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை, பிறழ்வு ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. முதலாவது கதையான ‘ஊர்க்கத’ உமையாழ், தான் பிறந்த, வாழ்ந்த இடமான கிழக்கிலங்கையின் ஒரு ஊரையும், அங்கு வாழ் மக்களின் இயல்புகளையும், பழக்கவழக்கங்களையும் இக்கதையினூடு எம்முன் விரிக்கிறார்.  பிரித்தானியாவில் குடியேற முன்னர் ஆறாண்டு காலம் அரேபியாவில் வாழ்ந்த உமையாழ் தான் வாழ்ந்த சவுதியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை ‘சபிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். ‘பிறழ்வு’ பெண்ணின் உணர்வுகளோடு ஆணாக பிறந்து விட்ட ஒருவனின் கதை. அவனது உணர்வுகள் மதிக்கப்படாது அவனது தந்தையாலேயே அவன் மிதிக்கப்பட்டதனால் ஏற்பட்ட மனஅழுத்தமும் அதனாலான மனப்பிறழ்வும் என்று ஒரு காத்திரமான கருவைக் கொண்ட கதை. ‘மேய்ப்பர்’ என்ற கதை,1989-1990 இல் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டதை மேலோட்டமாகவும், 2008 மார்ச்சில் முஸ்லீம் மக்கள் மீது சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறையைக் கொஞ்சம் விரிவாகவும் சொல்கிறது. ‘காதுப்பூ’ சவுதியின் மக்கா நகரில் அநாதரவாக இறந்து போய்விட்ட எம்மவர் ஒருவரின் கதை. கதை சவுதியில் தொடங்கி சவுதியில் முடிந்தாலும் அவரது ஊர் வாழ்க்கைதான் கதையில் சித்தரிக்கப் படுகிறது. ‘நின்கூடுகை’ ஓரின அல்லது ஒருபால் உறவு பற்றிய கதை. இருபெண்கள் சேர்ந்து வாழ்கிறார்கள். ஆனாலும் இதில் ஒரு பெண் ஆண்களுடனும் உறவு வைத்திருக்கிறாள். கதையில் வேறு நல்ல விடயங்கள் இருந்தாலும் இந்தப் பெண்ணுக்கும் பெண்ணுக்குமான பாலுறவைப் பற்றிய விவரணங்கள் சற்று அதீதமாக விபரிக்கப்படுகின்றன. இலண்டனைக் களமாகக் கொண்டு எழுதப்பெற்ற ‘வேரோடி’ இத்தொகுதியில் குறிப்பிடத்தக்கதொரு கதையாகும். இந்தக் கதையையும் உமையாழ் தன்னிலையில் இருந்தே எழுதுகிறார். ஐரோப்பியப் பெண்ணான மிஸஸ் தொம்சனின் ஐரோப்பிய வாழ்க்கையோடு கிட்டத்தட்ட அதே வயதையொத்த ஊரில் வாழும் தனது பாட்டியின் வாழ்வையும் கதையினூடு சொல்லிக் கொண்டு போகிறார். ‘CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை’ என்ற தலைப்புக் கதை உளவியல் தாக்கம் நிறைந்த,  Bar இல் நடனமாடும் ஒரு பெண்ணைப் பற்றிய இக்கதை அந்த Bar க்குள்ளேயே நகர்கிறது. சின்ன வயதில் பெற்றோரின் ஒற்றுமையின்மை, அதன் பின் அப்பாவின் நண்பர்களில் தொடங்கி அக்காவின் கணவர் வரையான சுற்றியிருந்த ஆண்களின் அணுகல் முறை, அவளைப் பயன்படுத்திய முறை, அக்காமாரின் புரிந்துணர்வில்லாத தன்மை… எல்லாவற்றையுமே ஒரு பெண்ணின் கோணத்திலிருந்து பார்த்துச் சொல்வது போலச் சொல்லும் யுக்தி சிறப்பாக உள்ளது. ‘அரூபம்’ கதையை உமையாழ் தன்னிலையில் இருந்து எழுதுகிறார். அதே வேளை இணையவழி முகநூலினூடாக அறிமுகமான உமையாழ் என்றொரு முகம் தெரியாத நண்பனை அபர்டீனில், ஒரு கோப்பிக்கடையில் சந்திக்கிறார். அங்குதான் பிரச்சினையும் குழப்பமும் ஆரம்பமாகிறது. இத்தொகுதியிலுள்ள ஒன்பது கதைகளும் ஏதோவொரு வகையில் தனித்துவமானவையாக உள்ளன.

ஏனைய பதிவுகள்