கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2012. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
120 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-30-8567-2.
தெம்மாடுகள், சொடுதா, வாசாப்பு, லேமியா- ஆகிய நாவல்கள் மூலம் அறிமுகமாகிய எழுத்தாளர் எஸ்.ஏ.உதயனின் மற்றுமொரு படைப்பு இச்சிறுகதைத் தொகுதியாகும். கூர்மையான சமூகப் பார்வையும், பிசிறற்ற மொழிவாண்மையும் கொண்டு உதயன், பாத்திரங்களை உயிர்த்துடிப்புடன் யதார்த்தம் குன்றாமல் உலவவிடும் திறன் மிக்கவர். இத்தொகுப்பில் இவரது 16 சிறுகதைகள் இடம்பெறுகின்றன. குண்டுசேர், பாவம் சந்திரா, இனி விடிந்து விடும், காணாமல் போனவன், ஊரைத் தெரிஞ்சுக்கிட்டு, ஸ்கொலர்ஷிப் சோதினை, ஓவியக் காதல், அபத்தம், பிள்ளை வரம், கடற்குளிப்பு, காத்திருப்பு, கொதிப்பு, யசோதா, கிரீடம், ஆசை மரிப்பு, மாற்ற மயக்கம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. இவற்றில் 8 கதைகள் பெண்களின் உளப் போராட்டத்தை வெளிப்படுத்துபவை. பெண்களின் மன உணர்வுகளை நுண்மையாகப் புரிந்துகொண்ட படைப்பாளியாக இக்கதைத் தொகுதியில் உதயன் முத்திரை பதிக்கிறார். தலைப்புக் கதையான குண்டுசேர்- புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான இரண்டு குழந்தைகளின் உளப் பிரச்சினைகளைச் சித்திரிக்கிறது. ஆசிரியர் ஒருவரின் உபகாரப் போக்கினை இக்கதை விபரிக்கிறது. காணாமல் போனவன்- கதையில் காணாமல்போன கணவனைத்தேடி அல்லும் பகலும் திரிந்த ஒருத்தி அவனை தன்னிலை மறந்தவனாகத் தெருவில் பைத்தியக்காரனாகத் திரிவதைக் காண்கிறாள். அவனை அப்படியே விட்டுவிட்டுச் செல்வதாகச் சித்திரிக்கிறார். காத்திருப்பு, ஆசை மரிப்பு ஆகிய கதைகள் முதுமையின் இயலாமையைச் சித்திரிக்கின்றன.