ஆசி கந்தராஜா (இயற்பெயர்: ஆறுமுகம் சின்னத்தம்பி கந்தராஜா). யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2021. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672B, காங்கேசன்துறை வீதி).
xxvi, 141 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-97823-1-0.
இத்தொகுப்பில் அந்திமம், முகமூடி மனிதர்கள், ஆண் குழந்தை, இந்துமதி ஆகிய நான், காதல் ஒருவனைக் கைப்பிடித்து, நரசிம்மம், வேதியின் விளையாட்டு, ஆண்சுகம், சாத்திரம் உண்டோடி, எதிரியுடன் படுத்தவள், கையது கொண்டு மெய்யது பொத்தி, சாது மிரண்டால், தலைமுறை தாண்டிய காயங்கள், எதிலீன் என்னும் ஹோமோன் வாயு, பணச்சடங்கு ஆகிய 15 கதைகள் இடம்பெறுகின்றன. இத்தொகுப்பில் உள்ள 15 கதைகளையும் அவற்றின் கதைக்களத்தின் அடிப்படையில் மூன்று தொகுதிகளாக வகைப்படுத்தி நோக்கலாம். முதலாவது, யாழ்ப்பாணத்தைக் களமாகக் கொண்டவை. இவ்வகையில் சாது மிரண்டால், இந்துமதி ஆகிய நான், நரசிம்மம் ஆகிய மூன்று கதைகளையும் சொல்லலாம். இரண்டாவது, ஈழத்தையும் புலம்பெயர்ந்த அவுஸ்திரேலியாவையும் களமாகக் கொண்டவை. இவை புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை அனுபவத்தைப் பேசுவன. இத்தகைய ஆறு கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. மூன்றாவது, பிறநாட்டு அரசியல் பண்பாட்டுப் பின்னணியில் அமைந்தவை. இவை பெரும்பாலும் ஜோர்தான், லெபனான், ஜெருசலேம், ஈரான் நாட்டு வாழ்க்கை பற்றியவை. இத்தகைய ஆறு கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இக்கதைகள் எல்லாமே மனிதர்கள் எதிர்நோக்கும் சமூக, அரசியல், தனிமனித, பண்பாட்டுச் சிக்கல்களையும் இன்னல்களையும், நெருக்கடிகளையும் உணர்வு பூர்வமாகச் சித்திரிப்பவை. இத்தொகுப்பில் உள்ள சாது மிரண்டால், இந்துமதி ஆகிய நான் ஆகிய இரண்டும் சற்று வித்தியாசமான கதைகள். நமது அன்றாட வாழ்க்கை அனுபவங்களுக்குள் பொதுவாக அகப்படாத, ஆனால் அகப்படக்கூடிய நிகழ்வுகளின் புனைவுகள். திருமண உறவையும் பாலியல் சிக்கல்களையும் பேசுபவை. (பேராசிரியர் எம்.ஏ. நுஃமான், முன்னுரையில்).