இமாம் அத்னான். சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 214, புவனேஸ்வரி நகர் 3வது மெயின் ரோடு, வேளச்சேரி, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ்).
88 பக்கம், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 21.5×14 சமீ.
கதைசொல்லுதல் என அழைக்க முடியாத ஒரு திசையில், முற்றிலும் புதியதொரு வாசிப்பு முறையைக் கோரி நிற்கும் இலக்கியப் புனைவுகளை தோழர் இமாம் அத்னான் உருவாக்கிக்கொண்டிருக்கிறார். புனைவின் புதுவகைச் சாத்தியங்களைப் பரிசோதித்தல், பிரதிகள் மீதான மாறுபட்ட வாசிப்புகளை முன்னெடுத்தல், இலக்கிய கலந்துரையாடல் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல், பொதுப் போக்கினை இடையீடு செய்தல் என்பதாக இயங்கிவருபவர். அப்படி அவர் உருவாக்கிய பிரதிகள் கதை சொல்லுதலின் அசாத்தியங்களையும், பிரதிக் கட்டமைப்பின் பன்மையான வழிகளையும் மாத்திரம் கொண்டிருக்கவில்லை. கருத்தியல் தளத்திலும் விழிப்புணர்வோடு வாசகர்களை நோக்கி பேசத்தொடங்குகின்றன. கிழக்கிலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட இலக்கியச் செயற்பாட்டாளர் இமாம் அத்னான், 1990இல் பிறந்தவர். சமூகப் பணியில் இளமாணிக் கற்கையைப் பூர்த்திசெய்த இவர் அரச சார்பற்ற தொண்டுநிறுவனங்களுடன் பணியாற்றுகின்றார். இத்தொகுதியில் இவரது 30 குறும் புனைவுகள் இடம்பெற்றுள்ளன. 2017இல் இவரது கவிதைத் தொகுப்பொன்று ‘மொழியின் மீது சத்தியமாக’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.