தக்ஷிலா ஸ்வர்ணமாலி (சிங்கள மூலம்), எம்.ரிஷான் ஷெரீப் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: ஆதிரை வெளியீடு, திருநெல்வேலி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட், ஸ்டேஷன் வீதி).
128 பக்கம், விலை: ரூபா 390., அளவு: 20×13 சமீ., ISBN: 978-624-97325-0-6.
‘நிலத்தை மொழிபெயர்த்தல்’ (தக்ஷிலா ஸ்வர்ணமாலி), ‘தேசங்களின் ஆத்ம பாஷை’ (எம்.ரிஷான் ஷெரீப்) ஆகிய இரு அறிமுகங்களுடன் தொடரும் இந்நூலில், தெரு வழியே, மாங்காய் பருவத்தில் அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது, அன்றைக்குப் பிறகு அவன் அவளருகே வரவேயில்லை, அந்திம காலத்தின் இறுதி நேசம், எப்போதுமே மேரி நினைவில் வருகிறாள், நந்தியாவட்டைப் பூக்கள், பொட்டு, இப்போதும் இருவரும் இடைக்கிடையே சந்தித்துக்கொள்கிறோம், ஒரே திடல், தங்கையைத் தேடித் தேடி அவன் அலைந்தான் ஆகிய தலைப்புகளில் இதிலுள்ள கதைகள் எழுதப்பட்டுள்ளன. செல்வச் செழிப்பும், மிகுந்த வசதிகளும் கொண்ட மேட்டுக்குடிகளாகத் தாம் வாழ்வதாக, அடுத்தவர்களின் பார்வைக்குக் காட்டப் பாடுபடும் பரிதாபத்துக்குரிய மத்திய தரப்பினரின் வாழ்வியல்;, போலி மற்றும் வீண் பகட்டுகளின் மீது கட்டியெழுப்பப்பட்டவை. அதை அவர்களே அறிவார்கள் எனினும் மீள வழியற்று அதிலேயே புதைந்து போயிருக்கிறார்கள். நகரத்துக்கும், கிராமத்துக்கும் இடையே மானசீகமாக அல்லாடிக்; கொண்டிருக்கும் அவ்வாறானவர்களின் ஜீவிதங்கள் மீது சமூகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாசார அதிர்வுகள் திணிக்கும் தாக்கங்களை இந்தத் தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளும் மறைமுகமாக எடுத்துரைக்கின்றன. மனிதர்கள் மீதான எமது வெற்று மதிப்பீடுகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை இந்தக் கதைகள் எமக்கு உணர்த்துகின்றன. மனிதனை அளவுகடந்து நேசிப்பதும், அவர்களது வெளியை மதிப்பதும் எவ்வளவு அவசியம் என்பதை எமக்குக் கற்றுத் தருகின்றன. எமக்கு அண்மையில் வாழ்ந்துகொண்டே மிக மிக அந்நியமாகிப் போன ஒரு சகோதர இனத்துடன் விரும்பியோ, விரும்பாமலோ கலாசார ரீதியாக ஒண்ட முடியாத ஒரு மாயத்திரை எம் முன்னே விழுந்து கிடக்கின்றது. சேர்ந்து வாழ்வதற்கு, இந்த வாழ்வை, இந்த வாழ்க்கை முறையைப் பகிர்ந்து கொள்வதற்கு எம்மிடம் எஞ்சி இருப்பது கலையும் இலக்கியமும்தான். அவற்றின் மூலம் எம்மிடையே விழுந்த அந்த மாயத் திரையை அகற்ற முடியும் என்கிற நம்பிக்கையை இந்தக் கதைகள் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. தக்ஷிலா ஸ்வர்ணமாலி, களனி பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். பாடசாலை ஆசிரியை. சிங்கள இலக்கிய உலகில் சிறுகதை, கவிதை, நாவல் படைப்புகளின் வழியாக நன்கு அறியப்பட்டவர்.